ஊழலை வெளிக்கொணர்ந்திடும் ஊடகவியலாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் தாக்கல்செய்திடும் போக்கை உத்தரப்பிரதேச மாநில அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று தில்லி பத்திரிகையாளர் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
இது தொடர்பாக தில்லி பத்திரிகையாளர் சங்கத்தின் (DUJ-Delhi Union of Journalists) எஸ்.கே. பாந்தே மற்றும் பொதுச் செயலாளர் சுஜாதா மாதோக் கூறியிருப்பதாவது:
உத்தரப்பிரதே மாநிலத்தில் சீயூர் என்னும் ஊரில் உள்ள அரசினர் பள்ளிக்கூடம் ஒன்றில் மதிய உணவுத் திட்டத்தில் நடந்திருக்கும் ஊழலை வீடியோ எடுத்தார் என்பதற்காக மிர்சாபூரைச் சேர்ந்த இதழியலாளர் பவன் ஜைஸ்வால் என்பருக்கு எதிராக கிரிமினல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருப்பதற்கு தில்லி பத்திரிகையாளர் சங்கம் (டியுஜே) கடும் அதிர்ச்சியையும் கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.
மதிய உணவுத் திட்டத்தின்கீழ் பள்ளிக் குழந்தைகளுக்கு வெறும் ரொட்டியையும் உப்பையுமே மதிய உணவாக அளித்திருப்பதையே அவர் வீடியோ படம் எடுத்தார். மதிய உணவுத் திட்டத்தின்கீழ் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து அளிக்கக்கூடிய விதத்தில் காய்கறிகள், பருப்பு, பால் மற்றும் சில தினங்களில் பழங்கள் அளிக்கப்பட வேண்டும். இது எதனையுமே அளித்திடாது வெறும் ரொட்டியையும் உப்பையும் அளிப்பதாக சமூக ஊடகங்களிலும் ஏஎன்ஐ செய்தி ஸ்தாபனத்தின் மூலமும் செய்திகள் வெளியாகி இருந்தன. இதனைத் தொடர்ந்து சில உள்ளூர் அலுவலர்கள் மட்டும் பணிமாற்றம் செய்யப்பட்டனர். சிலர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதிலிருந்து சமூக ஊடகங்களில் வெளியான விஷயங்கள் உண்மை என்பது புலனாகிறது. இவற்றை மாநில அரசு மறுக்கவில்லை.
இவ்வாறு மதிய உணவு குழந்தைகளுக்கு வழங்காததை வெளிக்கொணர்ந்தது ஒரு குற்றச்செயலா என்று டியுஜே கேட்கிறது. இவ்வாறு உண்மையை வெளிக்கொணர்ந்தமைக்காக ஜைஸ்வால் மற்றும் இருவர் மீது உத்தரப்பிரதேச மாநில அரசு இந்தியத் தண்டனைச் சட்டம் 186 (பொது ஊழியரைப் பணி செய்யவிடாது தடுத்தல்), 193 (பொய் சாட்சியம்), 120-பி (கிரிமினல் சதி), மற்றும் 420 (மோசடி) ஆகிய குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்திருக்கிறது.
ஒரு பள்ளிக்கூடத்தில் பிள்ளைகளுக்கு அளிக்கவேண்டிய உணவினை அளிக்காமல் ஊழல் நடந்திருப்பதை வெளிக்கொணர்ந்ததற்கு உத்தரப்பிரதேச மாநில அரசு இவ்வளவு கொடூரமான முறையில் நடவடிக்கை எடுத்திருக்கிறது. ஆட்சியாளர்கள் அளிக்கின்ற அறிக்கைகளை மட்டுமே ஊடகங்கள் வெளியிட வேண்டும் என ஆட்சியாளர்கள் விரும்புகிறார்கள். இத்தகைய போக்கு ஜனநாயகத்தை அரித்துவீழ்த்திவிடும். இந்த சமயத்தில் இதனை வெளிக்கொணர்ந்த ஊடகவியலாளர் பக்கம் நின்று அவரை நாங்கள் பாதுகாப்போம் என்று அந்த ஊடகத்தின் (ஜன்சந்தேஷ் டைம்ஸ்) ஆசிரியர் கூறியிருப்பதற்கு, டியுஜே தலைவணங்குகிறது. ஜைஸ்வால் மற்றும் சிலருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை உடனடியாக நீக்கிட வேண்டும் என்று டியுஜே கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு டியுஜே அறிக்கையில் கூறியுள்ளது.
(ந.நி.)