அமேதி:
மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியரில் நடைப்பெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில், அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி பேசியிருந்தார்.
அதில், “அமேதியில் ஒரு மருத்துவமனை உள்ளது: அதன் அறங்காவலராக நாட்டின் புகழ்பெற்ற குடும்பத்தின் உறுப்பினர் இருக்கிறார். இங்கு ஒரு ஏழை தனது சிகிச்சைக்காக, ஆஷ்மான் பாரத் அட்டையுடன் சென்றுள்ளார். ஆனால், அவர் என்னுடைய அரசு வழங்கிய காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற வருகிறார் என்பதற்காக, அந்த மருத்துவமனை அவருக்கு சிகிச்சை அளிக்க மறுத்துள்ளது” என்று மோடி குற்றம் சாட்டியிருந்தார்.முதலில், இப்பிரச்சனையைக் கிளம்பியவர் ஸ்மிருதி இரானிதான்.
“அமேதியிலுள்ள சஞ்சய் காந்தி மருத்துவமனைக்கு, ஒரு நோயாளி சிகிச்சைக்காக சென்றுள்ளார். அவர் ஆயுஷ்மான் காப்பீட்டின் கீழ் உள்ளவர் என்பதால் சிகிச்சை அளிக்க மறுக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனை மோடிக்கோ, ஆதித்யநாத்துக்கோ சொந்தமானது அல்ல; ராகுல் காந்திக்குச் சொந்தமானது என்று அங்குள்ள மருத்துவமனை அதிகாரிகள் கூறியுள்ளனர்” என்று ஸ்மிருதி இரானிதான் முதலில் கொளுத்திப் போட்டார்.
இந்த மருத்துவமனையின் அறங்காவலர்களில் (TRUSTEE) காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் ஒருவர் என்பதால், பிரதமர் மோடியும், ஸ்மிருதி இரானியும் இவ்வாறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தனர்.
இந்நிலையில், ஸ்மிருதி இரானி மற்றும் மோடியின் குற்றச்சாட்டை சஞ்சய் காந்தி மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது. தங்கள் மருத்துவமனை மீது சுமத்தப்பட்டிருப்பது ஆதாரமற்ற மற்றும் மோசடியான குற்றச்சாட்டாகும் என்றும், பிரதமரின் ஆயுஷ்மான் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், இதுவரை 200 பேருக்கு நாங்கள் சிகிச்சை அளித்துள்ளோம் என்றும் சஞ்சய் காந்தி மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.