உத்தரப்பிரதேச மாநிலம் சோன்பத்ராவில் இரண்டு பெரிய தங்கச் சுரங்கங்களை புவியியல் ஆய்வு மையம் கண்டுபிடித்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட சுரங்க அதிகாரி கே கே ராய் கூறும் போது சோன்பத்ராவில் தங்க இருப்புக்களைக் கண்டுபிடிக்கும் பணிகள் 1992-93 ஆம் ஆண்டுகளில் இந்திய புவியியல் ஆய்வு மையத்தால் தொடங்கப்பட்டன. இங்குள்ள சோன் பஹாடி மற்றும் ஹார்டி பகுதிகளில் தங்க சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. மேலும் இ-டெண்டரிங் மூலம் இந்தத் சுரங்கங்களை ஏலம் விடுதல் விரைவில் தொடங்கும் என கூறினார்.
இந்தச் சுரங்கங்களில் ரூ 12 லட்சம் கோடி மதிப்புள்ள 3,350 டன் அளவுள்ள தங்க படிமங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சோன்பஹாடி என்ற இடத்தில் 2943 டன் அளவுள்ள தங்க படிமங்களும், ஹார்டி என்ற சுரங்கத்தில் 646 டன் தங்க படிமங்களும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்தியாவின் கையிருப்பில் 626 டன் தங்கம் உள்ள நிலையில் இப்போது கிடைத்துள்ள தங்க அளவு கையிருப்பைவிட 5 மடங்கு அதிகம் என்பது தெரியவந்துள்ளது. தங்கம் மட்டுமின்றி யுரேனியம் போன்ற தாது பொருட்களும் இந்த இடத்தில் கிடைக்க வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.