ஜகார்த்தா
கனிமவளம் நிறைந்த தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியாவில் தங்கம், தாமிரம் மற்றும் நிலக்கரி போன்றவைகள் மிகுந்து காணப்படுவதால் அந்நாட்டில் ஆயிரக்கணக்கான சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. அரசு உரிமம் பெற்ற சுரங்க நிறுவனங்களை விட சட்டவிரோதமாக இயங்கிவரும் சுரங்கங்கள் அங்கு அதிகம் காணப்படுகின்றன.
இந்நிலையில் இந்தோனேசியாவின் முக்கிய நகரான மேற்கு சுமத்ராவின் சோலோக் நகரில் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த சுரங்கத்தில் ஒரு பெண் உள்பட 9 பேர் தங்கத்தை வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் பலத்த மழை பெய்ய சுரங்கத்திற்குள் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. தங்கத்தை வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் அனைவரும் சுரங்கத்தினுள் சிக்கிக்கொண்டனர். அடுத்த சில நிமிடங்களில் அந்த தங்க சுரங்கம் இடிந்து விழுந்தது.
பின்னர் தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் சுரங்க தொழிலாளர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். எனினும் இடிபாடுகளுக்குள் சிக்கிய 9 தொழிலாளர்களையும் பிணமாகத்தான் மீட்க முடிந்தது.