tamilnadu

img

ஜின்னா படத்தை பாகிஸ்தான்  அனுப்புவதே முதல் வேலை!

லக்னோ:
மக்களவைத் தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்ற உடனேயே பாஜக-வினர் தங்களின் வெறுப்புப் பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டனர்.

அதனொரு பகுதியாகவே, அலிகார் தொகுதி பாஜக எம்.பி. சதீஸ்குமார் கவுதம், இரண்டாவது முறை வெற்றிபெற்ற மறு நிமிடமே, “எம்.பி.யாக எனது பணியில் நான் முதன்மையாக பட்டியலிட்டிருப்பது அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் ஓர் அறையில் வைக்கப்பட்டுள்ள முகமது அலி ஜின்னா படத்தை பாகிஸ்தானுக்கே மீண்டும் அனுப்புவதுதான்” என்று ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ளார்.

“இந்துக்களும் முஸ்லிம்களும் இந்தியாவின் இரு கண்கள்” என்று கூறிய சையத் அகமத் கான், 1875-ஆம் ஆண்டு அலிகாரில் ஆரம்பித்ததுதான் முகம்மதன் ஆங்கிலோ ஓரியண்டல் கல்லூரி ஆகும். இதுதான் பின்னாளில் அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகமாக வளர்ந்தது.இந்த பல்கலைக்கழகத்திற்கு தனது சொத்துக்களை வாரி வழங்கியவர்தான், முகம்மது அலி ஜின்னா. இந்தியாவின் மாபெரும் தேசபக்த போராளியாக விளங்கிய ஜின்னா, பாகிஸ்தான் உருவாவதற்கு 8 ஆண்டுகளுக்கு முன்பே, 1939-இல் தனது சொத்துக்களை அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்திற்கு உயில் எழுதி வைத்தவர். பின்னாளில் பாகிஸ்தான் தனிநாடு முழக்கத்தை முன்வைத்தபோதும், உயிலை அவர் திருத்தவில்லை. இதனாலேயே ஜின்னாவின் புகைப்படம் அலிகார் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த வரலாறு எதுவும் தெரியாத பாஜக-வினர், முகம்மது அலி ஜின்னா படத்தை அகற்ற வேண்டும் என்று தொடர்ந்து மதவெறி அரசியலை செய்து வருகின்றனர்.