tamilnadu

img

அலிகார் மாணவர்கள் மீது வன்முறை... பிரிட்டிஷ் காலத்தில் கூட தாக்குதல் நடந்ததில்லை...

புதுதில்லி:
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக, அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தியநிலையில், பல்கலைக்கழகத்திற்கு உள்ளேயே புகுந்து அவர்கள் மீது போலீசார் கொடூரத் தாக்குதலை நடத்தினர். இதில், 78 மாணவர்கள் காயம் அடைந்ததுடன், 26 மாணவர்கள் கைதுசெய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடப்பட்டனர்.

இதற்கு உலகம் முழுவதும் மாணவர்கள் தங்களின் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில், அலிகார் பல்கலைக்கழக வரலாற்றுத்துறையின் தகைசால் பேராசிரியரான இர்பான் ஹபீப்-பும் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.“அலிகார் பல்கலைக்கழக மணவர்கள் மீது பிரிட்டிஷாரின் ஆட்சியில்கூட, இதுபோன்ற தாக்குதல் நடைபெற்றதில்லை. 1938-ஆம் ஆண்டு மாணவர்களுக்கும் போலீசாருக்கும் மோதல் ஏற்பட்டது. இதில், தலைமை காவல்துறை அதிகாரியாக இருந்த ஆங்கிலேயரை மாணவர்கள் தாக்கிவிட்டனர். அப்போதுகூட போலீசார், பல்கலைக்கழக வளாகத்தில் நுழையவில்லை” என்று கூறியுள்ளார்.அலிகார் பல்கலைக்கழக வளாகத்தில், போலீசார் நுழைவதற்கு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் தாரீக் மன்ஜூர் அனுமதி அளித்ததையும் இர்பான் ஹபீப் கண்டித்துள் ளார். இதன்மூலம், கடுமையான விமர்சனங்கள் எழ அலிகார் பல்கலைக்கழக நிர்வாகமே காரணமாகி விட்டது என் றும் தெரிவித்துள்ளார்.“பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை விட்டாலும், ஆய்வு மாணவர்கள்விடுதிகளில் தங்கி, தம் ஆய்வுகளைத்தொடர்வார்கள். ஆனால், இந்த முறைகுளிர்கால விடுமுறை என அறிவித்து விட்டு மறுநாளே அனைத்து மாணவர்களை விடுதிகளில் இருந்து கட்டாயமாக வெளியேற்றி உள்ளனர்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

இன்றைய ஆட்சியாளர்கள் மதத்தை அடிப்படையாக வைத்து ஆட்சி நடத்தும் சூழலில், முன்னாள்பிரதமர் நேருவுக்கு மதச்சார்பின்மையில் இருந்த பிடிப்பையும் இர்பான் ஹபீப் நினைவு கூர்ந்துள்ளார்.“அலிகார் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்று பாகிஸ்தானுக்கு இடம்பெயர்ந்தவர்கள் எண் ணிக்கையைக் கணக்கெடுக்க வேண்டும் என்று 1950-களில் சில வலதுசாரிஎம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் பிரதமர் நேருவிடம் வலியுறுத்தினர். இதற்கு நேரு, ‘அலிகார் மாணவர்கள் எங்கு சென்றாலும் மனிதநேயத்திற்காகப் பணியாற்றுவார்கள்’ எனப் பதிலளித்து அந்த எம்.பி.க்களின வாயை அடைத்தார்” என்றும் பெருமிதம் தெரிவித்துள்ளார்.