உத்தரப்பிரதேச மாநிலத்துக்கான பாஜக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது. 40 பேர் கொண்ட இந்த பட்டியலில், பிரதமர் மோடி, அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி, அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், உமாபாரதி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். எதிர்பார்த்ததைப் போலவே, பாஜக-வின் மிக மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோரின் பெயர்கள் பட்டியலில் இடம் பெறவில்லை. ஏற்கெனவே, காந்தி நகர் தொகுதியை அத்வானிக்கு தரமறுத்து விட்ட அமித்ஷா, அங்கு தன்னையே வேட்பாளராக அறிவித்துக் கொண்டார். முரளி மனோகர் ஜோஷியின் வாரணாசி தொகுதியை கடந்த 2014-ஆம் ஆண்டே மோடி பறித்துக் கொண்டார். பதிலுக்கு கான்பூர் வழங்கப்பட்டது. ஜோஷியும் அந்த தொகுதியில் பெரும் வெற்றிபெற்றார். ஆனால், இந்தமுறை ஜோஷிக்கு கான்பூர் தொகுதியும் இல்லை. தற்போது, அத்வானி, ஜோஷி, கல்ராஜ் மிஸ்ரா, சாந்த குமார், கரிய முண்டா ஆகியோருக்கு பாஜக-வில் எம்.பி. சீட் வழங்கவில்லை. இதுஒருபுறமிருக்க, அத்வானி, ஜோஷி போன்றவர்களுக்கு நட்சத்திரப் பிரச்சாரகர்கள் பட்டியலிலும் கூட பாஜக இடம் வழங்க மறுத்து விட்டது, அத்வானி, ஜோஷி ஆதரவாளர்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது. தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று நீங்களாகவே அறிவித்து விடுங்கள் என்று பாஜக தலைமை தன்னிடம் கூறியதாகவும், ஆனால், தான் அதை ஏற்கவில்லை என்றும் முரளி மனோகர் ஜோஷி கொதித்துள்ளார். பாஜகவை வளர்த்து விட்ட தலைவர்களை, மோடி - அமித்ஷாவும் சிறுமைப்படுத்தி விட்டதாக பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன.