tamilnadu

img

56 இன்ச் மார்பு இருக்கட்டும், மோடிக்கு இதயம் இருக்கிறதா?

லக்னோ:

அச்சமற்ற வலிமையான தலைமைப் பண்புக்கு 56 இன்ச் மார்பு தேவை என்று பிரதமர் மோடி, கடந்த 2014-ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது கூறியிருந்தார். அன்றைய பிரதமர் மன்மோகன் சிங்கை ஒரு கோழை என்று விமர்சிப்பதற்காக, இந்த வார்த்தையை மோடி பயன்படுத்தி இருந்தார்.


இந்நிலையில் 56 இன்ச் மார்பு இருந்து விட்டுப் போகட்டும்; மோடிக்கு இதயம் இருக்கிறதா? என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். 

இதுதொடர்பாக பிரியங்கா காந்தி மேலும் கூறியிருப்பதாவது: 


“என்னிடம் 56 இன்ச் மார்பு உள்ளது என்று பெருமையாக கூறினீர்கள். அதற்குள் இருக்கும் இதயத்தை எங்கே? என்று உங்களிடம் நான் கேட்கிறேன்.தேசப்பற்று பற்றி பேசும்போதெல்லாம் மோடி பாகிஸ்தானைப் பற்றி பேசுகிறார். அவருக்கு தேசப்பற்று என்பததெல்லாம் பாகிஸ்தானை எதிர்த்து பேசுவது மட்டும்தான் என்று நினைக்கிறார். வேலைவாய்ப்பின்மையும், விவசாயிகள் பிரச்சனையும் அவரது தேசப்பற்றுக்குள் வராது போலிருக்கிறது.


கடந்த ஐந்து ஆண்டுகளில் மோடியை உலகின் எந்த பக்கத்திலும் பார்த்திருக்கலாம். ஆனால், சொந்த நாட்டின் விவசாயிகளால் மட்டும் அவரைப் பார்க்க முடியவில்லை. விவசாயிகளைச் சந்திப்பது குறித்து ஒருபோதும் அவர் அக்கறை கொண்டதே கிடையாது.விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று பாஜக கூறுகிறது. இதன்படி பார்த்தால், ஐந்து பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு ஒரு நாளைக்கு தலா மூன்று ரூபாய்தான் கிடைக்கும். இதன்மூலம் அவர்கள் விவசாயிகளை அவமானம் படுத்துகிறார்கள். கடந்த ஐந்து ஆண்களில் ஐந்து கோடி வேலைவாய்ப்புகளை அழித்துள்ளனர். பண மதிப்பு நீக்கம் காரணமாக 50 லட்சம் பேர் வேலையை இழந்துள்ளனர்.”

இவ்வாறு பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.