உத்தரபிரதேச மாநிலத்தில் கோசலையில் பராமரிக்கப்பட்டு வந்த 22 பசுக்கள் உயிரிழந்துள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் பதாவுன் பகுதியில் அமைந்துள்ள கோ சாலையில் சுமார் 70 பசுக்கள் பராமரிக்கப்பட்டு வந்தன. பசுக்களுக்கு வழக்கம் போல தீவன இலைகள் கொடுக்கப்பட்டது. சிறிது நேரத்தில் பசுக்கள் மயங்கி விழுந்தன. இதையடுத்து பராமரிப்பு ஊழியர் உடனடியாக கோ சாலை நிர்வாகத்திற்கு தகவல் அளித்தார். இதைத்தொடர்ந்து மருத்துவர்கள் குழு பசுக்களுக்கு உடனடியாக சிகிச்சை அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த மருத்துவகுழு பசுக்களின் தீவனம் தண்ணீர் ஆகியவற்றை சோதனை செய்தனர். உயிரிழந்த பசுக்களும் உடற்கூராய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
ஆய்வில் பசுக்கள் இரையாக உண்ட கம்பு இலைகளில் நைட்ரஜன் அளவு அதிகம் இருந்ததும், அதனால் நைட்ரேட் நஞ்சு தாக்கப்பட்டு பசுக்கள் உயிரிழந்துள்ளதும் தெரியவந்துள்ளது.