tamilnadu

img

தூத்துக்குடியில் விரைவில் இரவு நேர விமான சேவை

தூத்துக்குடி:
தூத்துக்குடி விமானநிலையத்தில் இரவு நேரத் தில் விமானம் இறங்கும் வசதி தொடங்கப்பட்டு இருப்பதாக விமானநிலைய இயக்குனர் சுப்பிரமணியன் கூறினார்.

தூத்துக்குடி விமான நிலையம் பல்வேறு வளர்ச்சிகளை பெற்று வருகிறது. இந்த விமானநிலையத்தில் தொடர்ச்சியாக பல்வேறு வளர்ச்சி பெற்று வருகிறது. அதே நேரத்தில் இரவு நேரங்களில் விமானங்கள் இறங்கும் வசதி இல்லாமல் இருந்தது.இதனால் தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி தூத்துக்குடி விமான நிலையத்தில் இரவு நேரத்தில் விமானங்கள் தரையிறங்கும் வசதி ஏற்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இந்த நிலையில் இந்திய விமான நிலைய ஆணையம் அனுமதி அளித்து உள்ளது.

இதுகுறித்து விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணியன் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-தூத்துக்குடி விமான நிலையம் தொடர்ச்சியாக வளர்ச்சி பெற்று வருகிறது. தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு 5 விமானங்களும், பெங்களூருக்கு ஒரு விமானமும் இயக்கப்பட்டு வந்தன. ஊரடங்குக்கு முன்பு கடந்த ஆண்டு (2019) ஏப்ரல் மாதம் முதல் கடந்த மார்ச் மாதம் வரை 3 ஆயிரத்து 695 விமானங்கள் இயக்கப்பட்டு உள்ளன. இதன்மூலம் 2 லட்சத்து 35 ஆயிரத்து 725 பயணிகள் பயணம் செய்து உள்ளனர். ஊரடங்கு காலத்தில் கடந்த ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை 96 விமானங்கள் இயக்கப்பட்டு உள்ளன. இதன்மூலம் 2 ஆயிரத்து 764 பேர் பயணம் செய்து உள்ளனர்.

தற்போது இந்த விமான நிலையத்தில் சூரிய உதயத்துக்கு பிறகும், சூரியன் மறைவதற்கு முன்பு மட்டுமே விமானங்கள் தரையிறங்க அனுமதி உண்டு. தற்போது,இரவு நேர விமான சேவை அளிக்கும் வகையில் தரம் உயர்த்தப்பட்டு உள்ளது. இதற்கான அனுமதியை மத் திய விமான நிலைய ஆணையம் வழங்கி உள்ளது.இதற்காக விமான நிலைய ஓடுபாதை நீளத்தை அதிகரித்தல் உள்ளிட்ட 8 பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. ஓடுதள பாதையில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளன. ஓடுதளத்தில் இருந்து 56 கிலோ மீட்டர் சுற்றளவில் அதிக உயரம் கொண்ட 5 செல்போன் கோபுரங்களின் உயரம் குறைக்கப் பட்டது. உயரமான கட்டிடங்களில் ஒளிரும் விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதனால் தூத்துக்குடி விமான நிலையத்தில் இரவு நேரத்தில் விமானங்கள் தரையிறங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. 

இதன்மூலம் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த வர்த்தகர்கள், பொதுமக்கள் பயன்பெறுவார்கள்.மேலும் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதன் மூலம் பெரிய விமானங்கள் வந்து செல்ல வாய்ப்பாக இருக்கும். இதுதவிர விமான நிலைய ஓடுதளத்தை 3 ஆயிரத்து 115 மீட்டராக உயர்த்தவும், பயணிகள் முனையத்தை விரிவாக்கம் செய்வதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன. தூத்துக்குடி விமான நிலையத்தையொட்டி இந்திய கடற்படை, கடலோர காவல்படை விமானங்கள் இறங்குதளமும் அமைக்கப்பட உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.