அகர்தலா:
திரிபுரா மாநிலத்தில் 11ஆம் தேதியன்று நடைபெற்ற தேர்தலில் பாஜகவின் குண்டர்படையினர் வெளிப்படையாகவே வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றி, மக்களின் வாக்குரிமைகளைச் சூறையாடிச் சென்ற நிலைமையில்,இப்போது செவ்வாய்க் கிழமையன்று கிழக்குத் திரிபுரா தொகுதியில் நடைபெற்ற தேர்தலில்அனைத்துஅடக்குமுறை, அச்சுறுத்தல்களை யும் துச்சமெனத் தூக்கி யெறிந்து, துணிவுடன் மக்கள் வாக்களித்துள்ளார்கள். மாலை ஐந்து மணியளவில் பல வாக்குச்சாவடிகளில் மக்கள் வாக்களிப்பதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்தனர். செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்ற வாக்குப்பதிவின் போது சில வாக்குச்சாவடிகளுக்கு, வாக்காளர்கள் போவதற்கு பாஜக குண்டர்கள் தடை விதித்திருந்தனர். ஆரம்பத்தில் இடது முன்னணி வாக்குச்சாவடி முகவர்களும் சில வாக்குச்சாவடிகளிலிருந்து துரத்தி அனுப்பப்பட்டனர். ரிஷ்யமுக் என்னு மிடத்தில் காலை 9 மணி வரையிலும்கூட வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. பின்னர் அவ்வாறான வாக்குச்சாவடிகளுக்குத் துணிந்து வாக்களிக்கச் சென்றபோது, அவர்கள் மீண்டும் தாக்கப்பட்டனர்.
பாஜகவினர் கைது
சிசிடிவி கேமராக்கள் முதல்நாள் இரவு வரையிலும்கூட வாக்குச்சாவடிகளில் நிறுவப்படவில்லை. எனினும் பல இடங்களில் வாக்காளர்கள் சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளை அணுகி, தாங்கள் வாக்களிப்பதற்குப் பாதுகாப்பு அளித்திட வேண்டும் என்று கோரி, பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்புடன் வாக்களித்திருக்கின்றனர். கோவாய் என்னுமிடத்தில் பாஜகவின் மண்டல் தலைவர் ஒருவரும், அமர்பூர் என்னுமிடத்தில் பாஜகவின் இரு வாக்குச்சாவடி முகவர்களும் பாதுகாப்புப் படையினரால் பிடித்துச் செல்லப்பட்டனர். ஏப்ரல் 11ஆம் தேதி நடைபெற்ற தேர்தலுடன் ஒப்பிடுகையில் இப்போது தலைமைத் தேர்தல் ஆணையம், மாநிலதேர்தல் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் படையினரின் செயல்பாடுகள் ஆக்கப்பூர்வமாக இருந்தன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளரான ஜிதேந்திர சௌத்ரியும், மாநில செயலாளரான கவுதம் தாசும் அநேகமாக பதற்றம் நிறைந்திருந்த இடங்களுக்கு உடனுக்குடன் சென்றுநிலைமைகளைச் சமாளித்துள்ளார்கள். செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தின்போது, கௌதம் தாசும், பிஜன் தாரும் அனைத்து விதமான அச்சுறுத்தல்களையும் தகர்த்தெறிந்து, துணிவுடன் வாக்களித்து, தங்கள் ஜனநாயக உரிமைகளை நிலைநாட்டியுள்ள வாக்காளர்களை வெகுவாகப் பாராட்டினார்கள்.
மறுவாக்குப்பதிவு
கௌதம் தாஸ் பேசுகையில், மேற்குத் திரிபுராவில் 11ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் பாஜக குண்டர்கள் வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றி தாங்களே வாக்குகளை அளித்துள்ள விவரங்கள் தற்போது நிரூபிக்கப்பட்டிருப்பதால், அந்தத்தொகுதியில் 846 வாக்குச்சாவடிகளில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்திட வேண்டும் என்கிற எங்களின் கோரிக்கைக்குத் தலைமைத் தேர்தல் ஆணையம் செவிசாய்த்திட வேண்டும் என்று வலியுறுத்தினார். அவ்வாறின்றி முழுமையாக அங்கே மறு தேர்தல் நடத்திட உத்தரவிட்டாலும் நாங்கள் ஆதரிக்கத் தயார் என்றும் கூறினார். காங்கிரஸ் கட்சியின் தலைவரான பிரத்யோத் பிக்ரம்கிஷோர் தேவ்வர்மன் கூறுகையில், 11ஆம் தேதி வாக்குப்பதிவுடன் ஒப்பிடுகையில் இன்றைய வாக்குப்பதிவு அமைதியாக நடந்தது என்றும், இதேபோல் மேற்குத் திரிபுரா தொகுதியில் மீண்டும் தேர்தல் நடத்துவது தொடர்பாக விரைவில் தேர்தல் ஆணையம் முடிவெடுத்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
தேர்தல் ஆணையர் ஒப்புதல்
மாநிலத் தேர்தல் ஆணையர் ஸ்ரீராம் தரணிகண்டி செய்தியாளர்களிடையே பேசுகையில், அமர்பூர், ரிஷ்யாமுக் மற்றும் ஜோலைபாரி பகுதிகளில் வாக்காளர்கள் அச்சுறுத்தல் மற்றும் மிரட்டலுக்கு ஆளானது உண்மை என்று ஒப்புக்கொண்டார். மாலை 5 மணியளவில் வாக்காளர்கள் வாக்குப்பதிவு 80.40 சதவீதமாக இருந்தது என்றும், மேலும் 22 ஆயிரம் பேர் வாக்களிப்பதற்காக வரிசையில் நின்று கொண்டிருக்கின்றனர் என்றும் அவர் மேலும் கூறினார்.
அகர்தலாவிலிருந்து ராகுல் சின்கா