சேலம், மே 12-உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு சேலம், தருமபுரி அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் மற்றும் செவிலியர் பயிற்சி மாணவிகள் கேக் வெட்டி கொண்டாடினர்.சர்வதேச செவிலியர் தினம் ஆண்டுதோறும் மே 12 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஞாயிறன்று சர்வதேச செவிலியர் தினம் உலகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்ஒருபகுதியக சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்கள் மற்றும் செவிலியர் பயிற்சி மாணவிகள் மருத்துவமனை வளாகத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர் பணியை முழு மனதோடு செம்மையாக பணியாற்றுவோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டும், கேக் வெட்டி ஒருவருக்கொருவர் ஊட்டி விட்டு செவிலியர் தினத்தை கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் சேலம் அரசு மருத்துவக் கல்லூரிமருத்துவமனை முதல்வர், மருத்துவர்கள், செவிலியர்கள், செவிலியர் பயிற்சி மாணவிகள் என திரளானோர் கலந்து கொண்டனர்.
தருமபுரி
தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிளாரன்ஸ் நைட்டிங்கேள் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தும் வகையில் செவிலியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மரியாதை செலுத்தினர்.இந்நிகழ்ச்சிக்கு செவிலியர் கண்காணிப்பாளர் கலைதேவி தலைமை வகித்தார். இரண்டாம் நிலை செவிலியர் கண்காணிப்பாளர்கள் சாந்தி,அருள்மணி, மல்லிகா, சர்குணம் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.