திருச்சிராப்பள்ளி:
மின்துறையை தனியார்மய மாக்கும் வகையில் ஒன்றிய பாஜக அரசு கொண்டுவரவுள்ள மின்சார சட்டத்திருத்த மசோதாவை திரும்பப்பெறக் கோரி ஆகஸ்ட் 10 அன்று நடைபெறும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் சிஐடியு, திமுக, அதிமுக உள்பட அனைத்து சங்கங்கள் பங்கேற்கின்றன.
தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலச் செயற்குழு கூட்டம் திருச்சி வெண்மணி இல்லத்தில் ஞாயிறன்று மாநிலத் தலைவர் டி.ஜெய்சங்கர் தலைமையில் நடைபெற்றது.சிஐடியு மாநிலப் பொதுச்செய லாளர் ஜி.சுகுமாறன் துவக்கவுரை யாற்றினார். மின்ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச்செயலாளர் எஸ்.ராஜேந்திரன் பேசினார். கூட்டத்தில், நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய உள்ள மின்சார சட்டத்திருத்த மசோதாவால் சேவை துறையாம் மின்துறையை முற்றிலும் தனியார்மயமாக்க வழிவகை செய்திடும். மேலும் விவசாயிகளின் பம்புசெட்டுகளுக்கான இலவச மின்சாரம்ரத்து செய்யப்படும். நுகர்வோர் களுக்கு தற்போது கிடைக்கக்கூடிய 100 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட மானியங்கள் வெட்டப்படும். மின்கட்டணம் கடுமையாக உயர்த்தப்படும். மாநில அரசாங்கங்களுக்கு மின்துறையின் மீது எந்த கட்டுப்பாடும் இருக்காது. முற்றிலும் மின்சார வாரியங்கள் சிறு,சிறு கம்பெனிகளாக மாற்றப்பட்டு ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிற்குள் சென்று விடும். எனவே மின்சார சட்டத்திருத்த மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்தி ஆகஸ்ட் 10 ஆம் தேதிஇந்தியா முழுவதும் உள்ள மின்வாரிய ஊழியர்கள், பொறியாளர்கள், அலுவலர்களை பிரதிநிதித்துவம் படுத்தக்கூடிய அனைத்து தொழிற்சங்கங்களும் வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளன. ஆகஸ்ட் 10 ஆம் தேதி அல்லது மசோதா தாக்கல் செய்யும் நாளன்று நடைபெறும் அகில இந்திய வேலை நிறுத்தத்தை தமிழகத்தில் முழுமையாக வெற்றி யடைய செய்வது. மின்வாரியத்தை சீரமைப்பது என்ற வகையில் மின்சாரத்துறை அமைச்சர் அறிவித்த அறிவிப்பு களை அமல்படுத்தக் கூடாது. இது வேலைப்பளு, ஊதிய ஒப்பந்தத்திற்கு எதிரானது என்பதால் மின்துறை அமைச்சர் தொழிற்சங்க நிர்வாகிகளோடு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும்.
மின்வாரியத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான காலிப்பணி யிடங்களை நிரப்பிட வேண்டும். ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு ரூ.380 தினக்கூலியை வாரியமே நேரிடையாக வழங்க வேண்டும்.பகுதிநேர ஊழியர்களின் விபரங்களை முழுமையாக மேற்பார்வை பொறியாளரின் பரிந்துரையோடு வாரியத்தலைமைக்கு அனுப்பப் பட்டுள்ளது. இவர்களுக்கு நிரந்தர உத்தரவு உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் துணைபொதுச் செயலாளர்கள் கே.ரவிச்சந்திரன், வி.இளங்கோ, டி.பழனிவேல் மற்றும்மத்திய அமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாநில பொருளாளர் எம்.வெங்கடேசன் நன்றி கூறினார்.