tamilnadu

திருச்சிராப்பள்ளி மற்றும் தஞ்சாவூர் முக்கிய செய்திகள்

பிளஸ் 1 தேர்வில் திருச்சி மாவட்டம் 10-வது இடம்,

திருச்சிராப்பள்ளி, மே 8-கடந்த மார்ச் மாதம் பிளஸ் 1 தேர்வுகள் நடைபெற்றன. இந்த தேர்வு முடிவுகள் புதனன்று வெளியிடப்பட்டன. திருச்சி மாவட்டத்தில் தேர்ச்சி பெற்றவர்களின் விவரம் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருட்டிணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது :பிளஸ் 1 தேர்வை மொத்தம் 31,866 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் 30,887 மாணவர்கள் பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் 96.99 சதவீதம்.மாவட்டத்தில் மொத்தம் 14,235 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 13,611 மாணவர்களும், 17,631 மாணவிகள் தேர்வு எழுதியதில் 14,676 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 95.6 சதவீதமும், மாணவிகள் 97.99 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆதிதிராவிடர் பள்ளிகளில் 91 சதவீதமும், ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் 99 சதவீதமும், அரசுப்பள்ளியில் 94 சதவீதமும், பழங்குடியினர் பள்ளியில் 78 சதவீதமும், அரசு உதவிப்பெறும் பள்ளியில் 97 சதவீதமும், பகுதிநேர அரசு உதவி பெறும் பள்ளியில் 98 சதவீதமும், தன்னாட்சி மெட்ரிகுலேசன் பள்ளியில் 98 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்ற ஆண்டு 13-வது இடத்தில் இருந்த திருச்சி மாவட்டம் இந்த ஆண்டு 10-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


ஜமாபந்தி முன்னேற்பாடு கூட்டம் 

தஞ்சாவூர், மே 8 -தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டாட்சியர் க.ஜெயலெட்சுமி தலைமை வகித்தார். மண்டல துணை வட்டாட்சியர் சீனிவாசன், கூடுதல் தலைமை துணை வட்டாட்சியர் சுந்தரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், “மே 30, 31 மற்றும் ஜூன் 4, 6 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள ஜமாபந்தி (வருவாய் தீர்வாயம்) கூட்டத்தை சிறப்பாக நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதனைகிராம மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் தண்டோரா, மைக் செட் மூலம்விளம்பரப் படுத்துதல், ராயத்து வசூல், கிராம கணக்குகளை சரிசெய்தல், அனைத்து துறை அதிகாரிகள் பங்குபெறச் செய்து பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றுகுறைகளுக்கு தீர்வு காண்பது குறித்து ஆலோசிக்கப் பட்டது. மேலும், சிறுபாசனக் கணக்கெடுப்பு மற்றும் கஜா புயல் மறுசீரமைப்பு பணிகள் முன்னேற்றம் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டு, உரிய அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன. வருவாய் ஆய்வாளர்கள் அஷ்ரப் அலி, சுப்பிரமணியன், ஜோதி, பாண்டியராஜன் மற்றும் அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.