திருச்சிராப்பள்ளி:
நியாய விலைக்கடை ஊழியர்களை வஞ்சித்த தமிழக அரசுக்குகண்டனம் தெரிவித்து திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளன மாநிலக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற் றப்பட்டது.தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளன மாநிலக்குழு கூட்டம் ஞாயிறன்று திருச்சி வெண்மணி இல்லத்தில் சம்மேளன தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. செயல் தலைவர் அசோகன் முன்னிலை வகித்தார். பொதுச்செயலாளர் ஜீவானந்தம் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:தமிழகம் முழுவதும் உள்ள நியாய விலைக்கடை ஊழியர்கள் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கடந்த 2018-ம் ஆண்டு முதல் பல்வேறு கட்டப்போராட்டங்களை நடத்தி வந்தனர். இதனையடுத்து கூட்டுறவுத் துறை அதிகாரி தலைமையில் ஊதிய சீரமைப்புக் குழுவை அரசு அமைத் தது. ஊதிய சீரமைப்புக் குழுவும் தனது பரிந்துரைகளை 2018 டிசம்பரில் அரசிடம் அளித்து விட்டது. அரசு சீரமைப்பு குழுவின்பரிந்துரைகளை அமல்படுத்தாமல், எவ்வித நிதிப் பயனும் இல்லாத அரசாணையை வெளியிட்டுள்ளது. இது ஊழியர்கள் மத்தியில் பெருத்த ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் உருவாக்கி உள்ளது.சமவேலைக்கு சமஊதியம், இடைக்கால நிவாரணம், பணிவரன்முறை உள்ளிட்ட முக்கியமான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு தமிழகம் தழுவிய வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில் கோரிக்கைகள் ஏற்கப்பட்டு நிறைவேற்றப்படும் என்று அதிகாரிகள் எழுத்துப்பூர்வமான ஒப்புதல் கடிதம் வழங்கப்பட்ட பின் வேலை நிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டது.
ஏற்றுக் கொண்ட கோரிக்கைகள் மறுக்கப்பட்டு எவ்வித பயனும் இல்லாமல் அரசாணை வெளியிட்டு நியாய விலைக்கடை ஊழியர்களை ஏமாற்றி வஞ்சித்து விட்டது. அரசின் இந்த நடவடிக்கை மிகவும் கண்டனத்திற்குரியது, கோரிக்கைகளை, அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.