tamilnadu

img

தஞ்சாவூர் அரசுப் பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

தஞ்சாவூர், ஏப்.29-தஞ்சாவூர் அருகே மாரியம்மன் கோயில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவ, மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி ஞாயிறு அன்று நடைபெற்றது. தற்போது அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியாக உள்ள மாரியம்மன் கோவில் பள்ளி ஆரம்ப காலத்தில் இருபாலரும் படிக்கும் பள்ளியாக இருந்தது. கடந்த 1999- 2000 ஆண்டு பிளஸ் 2 வகுப்பு படித்த முன்னாள் மாணவ, மாணவிகள் அனைவரும் ஒன்றாக சந்திக்க முடிவு செய்தனர். இதையடுத்து ஒரு குழு அமைத்து அதற்கான பணிகள் நடைபெற்று வந்தது. முன்னாள் மாணவர் செந்தில்குமார் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து, அனைத்து முன்னாள் மாணவ, மாணவிகளையும் சந்திக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார். நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ரமேஷ் குமார் தலைமை வகித்தார். முன்னாள் மாணவர் ராஜா ராமநாதன் வரவேற்றார். 1999 -2000 ஆம் கல்வி ஆண்டில் இப்பள்ளியில் பிளஸ்-2 படித்துவிட்டு பல்வேறு ஊர்களில், பல்வேறு துறைகளில் பணியாற்றுபவர்களும், தொழில் செய்பவர்களும், குடும்பத் தலைவியாக இருக்கும் முன்னாள் மாணவிகள் தங்கள் குடும்பத்தினருடன் ஒன்று கூடினர். அப்பொழுது தங்கள் குடும்பத்தினரிடம் ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்து வைத்து, பழைய அனுபவங்களை மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டனர். நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சக்திவேல், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் பன்னீர்செல்வம், ராமச்சந்திரன், கமலி, வாசுகி தேவி, கோமளவல்லி, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் சுப்பையன், ரவிக்குமார் கோவிந்தசாமி, அரியலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நிறைவாக முன்னாள் மாணவி கலைச்செல்வி நன்றி கூறினார். முன்னாள் மாணவர்கள் சார்பாக பள்ளிக்கு ஸ்கேனர் எந்திரம் வழங்கப்பட்டது. மேலும் வரும் ஆண்டுகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவர்களை முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் கௌரவிப்பது என தீர்மானிக்கப்பட்டது.