திருச்சிராப்பள்ளி: திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 39வது வார்டு பஞ்சப்பூர் பகுதியில் நீண்ட காலமாக வசித்து வரும் மக்கள் வீட்டுமனை பட்டா, இலவச வீட்டுமனை கேட்டு பலமுறை மனுக் கொடுத்தும் இதுவரை ஆய்வு செய்யாததை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியின் அபிஷேக புரம் கிளை சார்பில் பஞ்சப்பூர் மந்தையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதைதொடர்ந்து கிழக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் தலைமையில் வெள்ளியன்று அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் மேற்படி பகுதி கிராம கணக்குகளில் வாரி என பதிவுகள் உள்ளதால் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அரசாணைப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தகுதியான பயனாளிகளுக்கு பட்டா வழங்க கடந்த 26.12.19 அன்று ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு அடிப்படையில் பணிகள் துவங்கப்படும் என முடிவானது. இந்த அமைதி பேச்சுவார்த்தை குறித்த விளக்க கூட்டம் சனிக்கிழமை அன்று பஞ்சப்பூர் மந்தையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு அபிஷேகபுரம் இடைக்கமிட்டி செயலாளர் வேலுச்சாமி தலைமை வகித்தார். பேச்சுவார்த்தையை விளக்கி மத்திய கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் பேசினார். பகுதிக்குழு உறுப்பினர் லெனின், சிவா, வீரமணி, இளங்கோ, சிதம்பரம், அஞ்சலை, மாரிமுத்து, முத்துக்குமார், வெள்ளைச்சாமி, கிளை செயலாளர் குருநாதன் உள்பட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.