சீர்காழி, ஜூன் 9- கொள்ளிடம் அருகே 10 வருடமாக பயனற்று கிடக்கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை மீண்டும் பயன்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே மணலகரம் கிராமத்தில் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக 40 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. இதனைப் பயன்படுத்தி இங்குள்ளவர்கள் தங்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து கொண்டனர். ஆனால் எந்தக் காரணமுமின்றி கடந்த 10 வருடங்களுக்கு மேலாக இந்த நீர்த்தேக்க தொட்டியிலிருந்து நீர் வழங்குவது நிறுத்தப்பட்டது. ஆரம்பத்தில் மின் மோட்டார் பழுதால் தண்ணீர் வழங்குவது நிறுத்தப்பட்டு, பின்னர் நிரந்தரமாக தண்ணீர் வழங்காத நிலை ஏற்பட்டது. உரிய தண்ணீர் கிடைக்காததால் இங்குள்ளவர்கள் அவதியடைந்து வருகின்றனர். மற்ற இடங்களில் நிலத்தடி நீரும் உப்பு நீராக மாறி விட்டதால் நல்ல தண்ணீர் கிடைப்பது அரிதாகி விட்டது. நல்ல தண்ணீர் கிடைக்கும் இடத்தில் அமைக்கப்பட்ட நீர்த்தேக்க தொட்டியும் செயல்படவில்லை. எனவே மணலகரம் கிராமத்தில் தற்பொழுது ஏற்பட்டுள்ள கடும் குடிநீர் பஞ்சத்தை தீர்க்கும் வகையில் செயல்படாமல் உள்ள நீர்த்தேக்க தொட்டியை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராமப் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.