திருவாரூர், மே 3-விதை பாதுகாப்பு சட்டத்தை தவறாக பயன்படுத்தி விவசாயிகளிடம் இழப்பீடு கோரும் பெப்சி நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் திருவாரூரில் வியாழக்கிழமை நடைபெற்றது. அமெரிக்க கார்ப்பரேட் நிறுவனமான பெப்சி, இந்திய உருளைக் கிழங்குகளை மரபணு மாற்றம் செய்து, புதிய உருளை கிழங்கு விதைகளை உருவாக்கி, அதை பயிர் பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் உரிமை சட்டத்தின் படி பதிவு செய்தது. பின்னர் பஞ்சாப், ஹரியானா, குஜராத் போன்ற மாநிலங்களில் பயிரிட வைத்தது. இதில் உற்பத்தியாகும் கிழங்குகளை தன் ஆலைக்கு கொள்முதல் செய்து வந்த பெப்சி நிறுவனம் அதற்கான விலையை விவசாயிகளுக்கு சரி வர கொடுக்கவில்லை. இந்நிலையில் தான் கண்டுபிடித்த உருளைக் கிழங்குகளை பயிரிட்ட விவசாயிகள் மீது வழக்கு தொடுத்த பெப்சி நிறுவனம், குஜராத் மாநிலத்தில் உள்ள 9 விவசாயிகளிடம் தலா ரூ.1.05 லட்சம் வீதம் மொத்தம் ரூ.9.45 கோடி தர வேண்டும் என இழப்பீடு கோரியுள்ளது. எனவே கிழங்கு மூல விதைகளுக்கு சொந்தமான விவசாயிகள் மீதே வழக்கு போட்டு இழப்பீடு கோரும் பெப்சி கம்பெனியை இந்தியாவில் தடை செய்ய வேண்டும். விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநில துணைச் செயலர் பி.எஸ்.மாசிலாமணி தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் கே.ராவணன், ஒன்றியச் செயலர்கள் தியாகராஜன், பரந்தாமன், ஏ.எஸ்.பாண்டியன், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் சி.பி.முருகானந்தம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.