tamilnadu

img

பெல் நிறுவனத்திற்கு டெண்டர் இல்லாமல் ஆர்டர் வழங்குங்கள்.... மத்திய அரசுக்கு பெல் சிஐடியு தொழிற்சங்க மகா சபை வலியுறுத்தல்....

திருச்சிராப்பள்ளி:
பெல் நிறுவனத்திற்கு டெண்டர் இல்லாமல் நேரடியாக மத்தியஅரசு ஆர்டர் வழங்க வேண்டும் என்று பெல் சிஐடியு தொழிற்சங்க ஆண்டு பொது மகாசபைக் கூட்டம் வலியுறுத்தியுள்ளது. 

பாரத மிகு மின் நிறுவனம் (பெல்) சிஐடியுவின் ஆண்டு பொது மகா சபைக்  கூட்டம் பெல்கம்யூனிட்டி ஹாலில் நடை பெற்றது. கூட்டத்திற்கு சங்கத் தலைவர் டி.கே. ரெங்கராஜன்  தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.அப்போது அவர், “பெல் சிஐடியு தொழிற்சங்கத்தில் இணைந்து பணியாற்றுகின்ற ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இளைஞர்களாக இருப்பது நமது சங்கத்திற்கு வலுசேர்க்கும். மேலும் இந்த தொழிற்சங்க தலைவர்கள் ஆலைக்கு வெளியிலும் தொழிலாளர்களை திட்டுகின்ற பணியில் ஈடுபடவேண்டும்” எனஅழைப்பு விடுத்தார். பொதுத்துறை நிறுவனங்களுக்கு இன்றைய சூழலில் ஏற்பட்டிருக்கின்ற நெருக்கடி மற்றும் அந்த நெருக்கடியை எவ்வாறு எதிர்த்துப் போராடுவது என்றும் அவர் விளக்கி பேசினார் . 

வேலையின்மை அதிகரித்து வரும் நிலை; 93சதவீதம் முறைசாரா தொழிலாளர்களாக மாற்றப்பட்டுள்ள அவலம், சிறு, குறு, தொழில் நசிவு, பொதுத்துறை தனியார் மயத்தின் பின்னணியில் ஆளும் வர்க்கத்தின் அரசியல் பற்றியும் விளக்கினார். மேலும்பெல் சிஐடியு சங்கம் அமைத்த தில் இருந்து பல்வேறு தொழிற் சங்க தலைவர்களுடைய போராட்ட நிலைப்பாடுகளும், போராட்டத்தின் வெற்றிகள் குறித்தும் அவர் பேசினார்.சிஐடியு திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் சிவராஜன்,பெல் சிஐடியு சங்க துணைத் தலைவர்கள் அருள்மணி, திவ்யஸ்ரீ ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அஞ்சலி தீர்மானத்தை துணைத்தலைவர் அருணன் வாசித்தார். முன்னாள் மாவட்ட செயலாளர் எஸ்.ஸ்ரீதர் துவக்க உரை ஆற்றினார்.  வேலை அறிக்கையை பெல் சிஐடியு சங்க பொதுச் செயலாளர் பிரபுமுன் வைத்தார். வரவு செலவு அறிக்கையை பொருளாளர் பெரியசாமி சமர்ப்பித்தார். சங்க விதிகள் திருத்தம் குறித்து துணைத் தலைவர் பெரியசாமி பேசினார்.  

கூட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் பெல் நிறுவனத்திற்கு டெண்டர்  இல்லாமல் நேரடியாக ஆர்டர் வழங்கவேண்டும்; தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த 50 சதவீத பெர்க் அலவன்ஸை அரியருடன் திரும்ப வழங்க வேண்டும்; பொதுத்துறை விற்பனையை கைவிட வேண்டும்; வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்; எல் சி எஸ் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; காண்ட்ராக்ட் தொழிலாளர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கவேண்டும்; 44 தொழிலாளர் நலச்சட்டங்களை நான்கு தொகுப்பு களாக மாற்றுவதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.தீர்மானங்களை முன்மொழிந்து சங்க நிர்வாகிகள் கணேசன், குமரவேல், ஷேக் சையது அலி, குமாரவேலு, முருகேசன், செந்தில்குமார், வள்ளிமுத்து, இசக்கிமுத்து, செல்வராஜ், மோகன்ராஜ், மருதவேல், சந்திரசேகரன், பாலமுருகன், செல்வராசு ஆகியோர் பேசினர். கூட்டத்தில் 400க்கும் மேற்பட்ட சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.முன்னதாக சங்க செயலாளர் பரமசிவம் வரவேற்றார். முடிவில் அமைப்பு செயலாளர் ராஜேஷ்கண்ணா நன்றி கூறினார்.

நிர்வாகிகள் தேர்வு
கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக டி. கே. ரெங்கராஜன், துணைத்தலைவர்களாக கே. அருணன், வி பெரியசாமி, டி. ராஜேஷ்கண்ணா, ஆர்.குமாரவேலு, கே.திவ்யஸ்ரீ, என். முருகேசன், எம்.செந்தில்குமார், என். செல்வராஜ், எம். மோகன்ராஜ், ஆர். வள்ளிமுத்து, பொதுச் செயலாளராக யூ. பிரபு, செயலாளராக ஆர்.பரமசிவம், ஒருங்கிணைப்பு செயலாளராக ஏ. சந்திரசேக ரன், பொருளாளராக கே. இசக்கிமுத்து, உதவி செயலாளர்களாக டி.பாலமுருகன், எஸ்.செல்வராசு, வி.சேவியர் ராஜ், பி. காளிராஜ், எஸ். பால்முருகன், ஞானசேகரன், டி. ஆறுமுகம், செந்தில்,எஸ்.வடிவேல் செல்வம், ஜெ. நைஜில் ஆண்டனி,  என்.தங்க முத்து பாண்டியன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.