தஞ்சாவூர் ஜூன்.15- கடல் பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், மீன்வளத்தை பாதுகாக்கும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்.15 ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை மீன்பிடி தடைகாலம் அமல்படுத்தபடுகிறது. 60 நாட்கள் தடைக் காலமானது ஜூன் 14 ஆம் தேதி நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைந்தது. தஞ்சை மாவட்டம் மல்லிபட்டினம், சேதுபாவாசத்திரம், கள்ளிவயல் தோட்டம் பகுதி விசைப்படகு மீனவர்கள் வாரத்தில் திங்கள், புதன், சனிக்கிழமை மட்டுமே மீன்பிடிக்க செல்ல முடியும். மற்ற நாட்களில் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்வது வழக்கம். இதையடுத்து சனிக்கிழமை அதிகாலை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதில் சேதுபாவாசத்திரத்தில் 42 விசைப் படகுகளும், கள்ளிவயல் தோட்டத்தில் 15 விசைப்படகுகளும், மல்லிபட்டினம் துறைமுகத்திலிருந்து 4 விசைப்படகுகளும் என மொத்தம் 61 படகுகள் மட்டுமே கடலுக்கு மீன்பிடிக்க சென்றன. கடந்த வருடம் வீசிய கஜா புயலால் விசைப்படகுகள் அனைத்தும் சேதமடைந்ததால் நீண்ட காலமாக மீன்பிடிக்க செல்லவில்லை. இதில் பகுதி சேதமடைந்த படகுகளுக்கு ரூபாய் 3 லட்சமும், முழுவதும் சேதமடைந்த படகுகளுக்கு ரூபாய் 5 லட்சமும் அரசு நிவாரணம் அறிவித்தது. இதில் பகுதி சேதமடைந்த படகுகள் நிவாரணம் பெற்றுக் கொண்டு படகுகளை சீரமைத்தனர். முழுவதும் சேதமடைந்த படகுகளுக்கு நிவாரணம் போதாது என விசைப்படகு மீனவர்கள் போராடி வந்தனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னரே சிலருக்கு நிவாரணத்தொகை கிடைத்தது. அதனால் மற்றவர்கள் படகுகள் தயார் செய்ய முடியாத நிலையில் உள்ளனர். இதனால் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் தொழில் செய்து வந்த நிலையில், புயலுக்கு பின்னர் தற்போது 61 படகுகள் மட்டுமே கடலுக்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.