tamilnadu

பிப்.12-26 வரை திருச்சியில் கடன் வழங்கும் சிறப்பு முகாம்கள்

திருச்சிராப்பள்ளி, பிப்.8- தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம்(டாம்கோ) மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாப்செட்கோ) மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு கடன் திட்டங்களான தனி நபர் கடன் திட்டம், சுய உதவிக்குழுக்களுக்கான சிறு கடன் திட்டம், கல்வி கடன் திட்டம், கறவை மாடு கடன் திட்டம், ஆட்டோ கடன் திட்டம் மற்றும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் விவசாயிகளுக்கான நீர்பாசன கடன் ஆகிய திட்டங்களுக்கான கடன் வழங்கும் சிறப்பு முகாம்கள் திருச்சி மாவட்டத்தில் பிப்ரவரி 12 அன்று திருச்சி மேற்கு நகர கூட்டுறவு வங்கி, பிப்.14 அன்று திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பாலக்கரை கிளை, பிப்.18 அன்று திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி லால்குடிகிளை, பிப்.20 அன்று மணப்பாறை புத்தாநத்தம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், பிப்.24  அன்று மத்திய கூட்டுறவு வங்கி துறையூர் எரக்குடி கிளை, பிப். 26 அன்று முசிறி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் தொட்டியம் கொளக்குடிகிளை, ஸ்ரீரங்கம் நகர கூட்டுறவு வங்கி ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. டாம்கோ மற்றும் டாப்செட்கோ கடனுதவி திட்டங்களுக்கு விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 60 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும்.  மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மூலம் செயல்படுத்தப்படும். புதிய தொழில், ஏற்கனவே செய்து வரும் தொழிலை விரிவாக்கம் செய்ய கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் அனைத்து விதத்திலும் முழுமையாக இருக்கும்பட்சத்திலும் கடன் அளிப்பதற்கான அனைத்து விதிமுறைகளையும் பூர்த்தி செய்யும் பட்சத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, கடன் தொகைகள் சம்மந்தப்பட்ட வங்கிக்கு அனுப்பி வைக்கப்படும்.  வங்கி மூலம் விண்ணப்பத்தாரருக்கு கடன் அளிக்கப்பட்டதும் எந்த தொழில் செய்ய கடன் பெற்றார்களோ அந்த தொழிலை செய்வதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். தவறான தகவல்கள் அளித்து கடன் பெற்றது தெரியவந்தால், கடன் உத்தரவு ரத்து செய்யப்பட்டு தொகை மொத்தமாக வசூலிக்கப்படுவதோடு எதிர்காலத்தில் எவ்வித கடன் தொகையும் கோரி விண்ணப்பிக்க முடியாதவாறு நடவடிக்கை எடுக்கப்படும். இம்மாவட்டத்தில் வசிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் மேற்படி சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு கடன் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம். கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும் போது பள்ளி மாற்று சான்றிதழ் மற்றும் உண்மைச் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் ஒளிப்பட நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும். விவசாயிகளுக்கான நீர்பாசன கடன் பெற விண்ணப்பதாரர் சிறு,குறு விவசாயி என்பதற்கான சான்றினை சம்பந்தப்பட்ட வட்டாட்சியரிடமிருந்து பெற்று வழங்க வேண்டும். இச்சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு கடன் உதவி பெற்று பயனடையுமாறு திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.