tamilnadu

பாதுகாப்புத்துறை தொழிற்சாலைகளை பொதுத்துறையாக மாற்ற மத்திய அரசு முயற்சி தொழிற்சங்கங்கள் கண்டனம்

திருச்சிராப்பள்ளி, ஜூலை 11- அகில இந்திய பாதுகாப்புத்துறை தொழிலாளர்கள் சம்மேளன பொதுச்செயலாளர் ஸ்ரீகுமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: 80,000 பாதுகாப்புத்துறை தொழிலாளர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி மத்திய அரசு படைத்துறை தொழிற்சாலைகளை பொதுத்துறையாக மாற்றி தனியாரிடம் தாரை வார்க்கும் முடிவோடு அதற்கான ஆலோசகரை நியமிக்க டெண்டர் வெளியிட்டுள்ளது. பாதுகாப்புத்துறை தொழிலாளர்களின் அனைத்து தொழிற்சங்க அமைப்புகளும் ஏற்கனவே அரசின் தன்னிச்சையான முடிவைக் கண்டித்து காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கான தயாரிப்பை செய்து வரும் நிலையில் தற்போது அரசு தனது முடிவை அமல்படுத்த ஆலோசகரை நியமனம் செய்ய டெண்டர் விளம்பரம் வெளியிட்டுள்ளது.  இதனைக் கண்டித்து 41 பாதுகாப்புத்துறை தொழிற்சாலைகளின் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்க சம்மேளனங்கள் ஏஐடிஇஎப், ஐஎன்டிடபுள்யுஎப், பிபிஎம்எஸ் மத்திய பாதுகாப்பு அமைச்சருக்குக் கண்டன கடிதம் அனுப்பியுள்ளதோடு அரசால் நியமிக்கப்படுகின்ற ஆலோசகர் பாதுகாப்புத் தொழிற்சாலைகளுக்கு வருகை புரிந்தால் கடும் தொழில் அமைதியின்மை ஏற்படும். மேலும் பாதுகாப்புத் தளவாட உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படும். தொழிலாளர்கள் ஆலோசகரின் வருகையை எதிர்த்து போராடுவார்கள். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.