திருச்சிராப்பள்ளி, ஜூலை 21- வருமான வரி செலுத்தும் வரம்பிற்குள் வராத அனைவருக்கும் ரூ.7500 வழங்க வேண்டும். நூறுநாள் வேலை வாய்ப்பு திட்டத்தை 200 நாளாக்கி, தினக்கூலி ரூ.600 வழங்கி நகர்புறத்திற்கும் விரிவுப்படுத்த வேண்டும். மின்சார சட்ட திருத்தம் 2020-ஐ திரும்ப பெறவேண்டும். தொழிலாளர் நல சட்டங்களை திருத்தியதை திரும்ப பெறவேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு, விவசாய, விவசாய தொழிலாளர் சங்கங்களின் சார்பில் ஜூலை 23 அன்று நாடு தழுவிய பிரச்சாரம் நடைபெற உள்ளது. திருச்சி மாநகரில் ஜூலை 23 அன்று நடைபெறும் பிரச்சார இயக்கம் குறித்த ஆலோசனை கூட்டம் சிஐடியு, விவசாய, விவசாய தொழிலாளர் சங்கங்களின் சார்பில் வெண்மணி இல்லத்தில் திங்களன்று நடைபெற்றது. சிஐடியு மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன் தலைமை வகித்தார். கூட்டத்தில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 100 குழுக்கள் மூலம் திருச்சி மாநகர் மற்றும் மணிகண்டம் அந்தநல்லூர் ஒன்றிய பகுதிகளில் 15,000 துண்டு பிரசுரங்களை விவசாயிகள், தொழிலாளர்கள், பொதுமக்களிடம் கொடுத்து பிரச்சாரம் செய்வது என முடிவு செய்யப்பட்டது. சிஐடியு மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கே.சி.பாண்டியன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.