திருத்துறைப்பூண்டி, மே 10- விவசாய சங்க திருவாரூர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம், திருத்துறைப்பூண்டியில் வெள்ளியன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் எஸ்.தம்புசாமி தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட செயலாளர் வி.எஸ்.கலியபெருமாள் பேசினார். மாவட்ட நிர்வாகிகள் எஸ்.சாமிநாதன், கே.சுப்பிரமணியன், கே.தமிழ்ச்செல்வி, எம்.சண்முகசுந்தரம், ஜி.பவுன்ராஜ் கலந்து கொண்டனர். சங்க மாநிலத் தலைவர் கே.சுப்பிரமணி யன், சங்க மாநிலக்குழு முடிவுகளையும், வருங்கால கடமைகளையும் பேசினார். தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக விவசாயிகள் பல்வேறு பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். விவசாயிகளின் நிலை இன்று கேள்விக்குறியாகி உள்ளது.விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், அவர்களின் நிலை மேம்பட மாநிலம் முழுவதும் உள்ள மாவட்டங்களை 4 மண்டலமாக பிரித்து வரும் ஜூன் 22-ந் தேதியிலிருந்து 26-ந் தேதி வரை விவசாய சங்க நிர்வாகிகளுக்கான மண்டல பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இதில் ஒரு கட்டமாக திருவாரூரில் 25, 26 ஆகிய இரண்டு தினங்கள் தமிழகத்தை சீரழிக்க மத்திய- மாநில அரசுகளால் கொண்டு வரப்பட்ட ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தி மண்டல மாநாடு நடைபெற உள்ளது. இதன் முன் ஏற்பாடாக ஜூன் 5-ந் தேதியிலிருந்து 10-ந் தேதி வரை தமிழகம் முழுவதும் ஹைட்ரோ கார்பன் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு பிரச்சார சைக்கிள் பேரணி நடைபெற உள்ளது. இதில் சக்தியாக விவசாய சங்க தோழர்களை திரட்டி பேரணியை நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது. அதுமட்டுமின்றி உடனடியாக விவசாய சங்க கிளைகளை கூட்டி பேரணிக்கான அறைகூவலிடுங்கள் என கே.சுப்பிரமணியன் பேசினார்.