பெர்த்
மகளிருக்கான டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 7-வது சீசன் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.
இந்த உலகக்கோப்பை தொடரின் 4-வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி தென் ஆப்பிரிக்க அணியை எதிர்கொண்டது. ஞாயிறன்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி நடலியின் (50) சிறப்பான ஆட்டத்தால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் ஹாகா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
124 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் தொடக்க வீராங்கனை லீ (4) மட்டும் சொதப்பினார். கேப்டன் டானே வான் (46), மரிஜான்னே (38) ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தென் ஆப்பிரிக்க அணி வெற்றி இலக்கை எளிதாக நெருங்கியது.
ஆனால் பந்து, ரன் விகிதம் மாறுபட்டு இருந்ததால் கடைசி கட்டத்தில் பரபரப்பு தொற்றியது. எனினும் டு ப்ரீஸின் (18) இறுதிக்கட்ட அதிரடியால் தென் ஆப்பிரிக்க அணி கடைசி ஓவரில் வெற்றியை ருசித்தது உலக சாம்பியனுக்கு அதிர்ச்சி அளித்தது.
தென் ஆப்பிரிக்க அணி 19.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.