திருவண்ணாமலை, ஏப்.16-திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டத்தில் உள்ளது மருதாடு கிராமம். இங்குள்ள இருளர் குடியிருப்பில் வசித்து வருபவர் 85 வயது முதியவர் கண்ணியப்பன். கண்ணியப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் கருப்பாயி, பாபு, காமாட்சி, பிரபு, ராதிகா, ராஜேந்திரன் ஆகிய 7 நபர்களும் இதுவரை தங்கள் வாழ்நாளில் எந்த ஒரு தேர்தலிலும் வாக்களித்தது இல்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கொத்தடிமைகளாக வேலை பார்த்து வந்த நிலையிலிருந்து இவர்கள் மீட்கப்பட்டுள்ளார்கள். தற்போது இவர்கள் முதல் முறையாக தேர்தலில் வாக்களிக்க உள்ளார்கள். இதேபோல், போளூர் வட்டத்திலும்; 10 நபர்களும் முதன்முறையாக வாக்களிக்க சேர்க்கப்பட்டுள்ளார்கள். முதல் முறையாக வாக்களிக்க உள்ள 85 வயது முதியவர் கண்ணியப்பன் மற்றும் அவரின் குடும்பத்தினர் வசிக்கும் வீட்டிற்கு நேரில் சென்று, வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் வாக்களிப்பது குறித்தும் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் ஆட்சித் தலைவர் க. சு. கந்தசாமி செயல்விளக்கம் அளித்தார்.
தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் பேசிய போது, “திருவண்ணாமலையில் கோடை வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் வாக்காளர்களின் வசதிக்காக வாக்குப் பதிவு தினத்தில், பகல் நேரங்களில் கூட்டம் அதிகமாக உள்ள வாக்குச் சாவடிகளில் காத்திருப்பு அறைகள் அமைக்கப்பட்டு, வெயிலில் வரிசையில் நிற்கும் வாக்கா ளர்களுக்கு டோக்கன் வழங்கி வரிசைப்படி வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது” என்றார்.மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் அதிகமாக உள்ள 240 வாக்குச் சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்கு வசதியாக காலை 11 மணிக்கு ஒரு பொது இடத்தில் சம்மந்தப்பட்ட வாக்குச் சாவடிக்குட் பட்ட மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் சேர்ந்து சிறப்பு வாகனம் மூலம் வாக்களிக்க அழைத்து வரப்பட்டு, மீண்டும் அதே இடத்தில் சேர்ப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றும் வாக்குச் சாவடிகளில் சிறப்பு பணியாளர்கள் கொண்டு சக்கர நாற்காலி மூலம் வாக்களிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது என்றும் கூறினார்.