tamilnadu

கல்குவாரியை எதிர்த்து போராடிய விவசாயி கொலை

திருவண்ணாமலை, பிப். 12- திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே கல்குவாரிக்கு எதிப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்ட விவசாயி லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டார். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தாலுக்கா சுருட்டல் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி கன்னியப்பன் (65). இவரது விவசாய நிலத்தின் அருகே கல்குவாரி இயங்கி வருகிறது. இதனால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக கூறி கன்னியப்பன் மற்றும் அப்பகுதியில் உள்ள விவசாயிகள், அந்த வழியாக வரும் வாகனங்களை அவ்வப்போது முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். கடந்த 9ஆம் தேதி நள்ளிரவு விவசாய நிலத்திற்கு சென்ற கன்னியப்பன், அந்த வழியாக கல்குவாரிக்கு சென்ற லாரியை மடக்கினார். அப்போது லாரியை ஓட்டிவந்த டிரைவர் பாலமுருகன் (39), கன்னியப்பன் மீது லாரியை ஏற்றினார். இதில் சம்பவ இட்த்திலேயே கன்னியப்பன் உயிரிழந்தார். லாரி ஓட்டுநர் பாலமுருகன் அங்கிருந்து சென்று தப்பி விட்டார். தகவலறிந்து சம்பவ இட்த்திற்கு வந்த தூசி காவல் துறையினர் சடலத்தை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நட்த்தி வந்தனர். இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் தீயணைப்பு துறையில் மாவட்ட அலுவலராக பணிபுரியும் கன்னியப்பனின் மகன் முரளி தூசி காவல் நிலையத்தில் தனது தந்தையின் சாவில் மர்மம் உள்ளதாகவும் உரிய விசாரணை நடத்துமாறும் புகார் அளித்தார்.  இதையடுத்து காவல் கண்கணிப்பாளர் சிபிசக்கரவர்த்தி சம்பவம் நடந்த பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினார், விசாரணையில், கன்னியப்பன் லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர் பாலமுருகனை கைது செய்தனர்.