திருவண்ணாமலை, மார்ச் 18 - திருவண்ணாமலை மாவட்டம், போளூர் தாலுகா சனிக்காவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் மார்க்கபந்து (25). இவரது குடும்பத்துக்கும் மட்டப்பிறையூர் கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவரின் குடும்பத்திற்கும் சொத்து தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. இந்தமுன்விரோதம் காரணமாக கடந்த 2015 ஆம் ஆண்டு சந்திரசேகரன் மற்றும் அவரின் கூட்டாளிகள் மார்க்கபந்துவின், தம்பி தமிழ்ச்செல்வனைஅடித்து கொலை செய்தனர். இது குறித்து மார்க்கபந்து கொடுத்த புகாரின் அடிப்படை யில் போளூர் காவல் ஆய்வாளர் வழக்குப்பதிவு செய்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. செவ்வாயன்று இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பில், மட்டப்பிறையூர் சந்திரசேகருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 7 ஆயிரம் அபராதமும், கட்டத் தவறினால் 6 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. மேலும் கூட்டாளிகளான செல்வகுமார், மற்றும் மோகன் ஆகியோருக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை, ரூ. 4 ஆயிரமும் அபராதம் விதித்தும், கட்டத் தவறினால் ஒரு மாத சிறை தண்டனை விதித்து நீதிபதி திருமகள் தீர்ப்பு வழங்கினார்.