திருவள்ளூர், டிச.3- திருவள்ளூர் வட்டம் தாமரைப்பாக்கம், கொமக்கம்பேடு, மாகரல், சேத்துப்பாக்கம், அமணம்பாக்கம், வெங்கல் போன்ற ஊராட்சிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் குடிமனை பட்டா கேட்டு தொடர்ந்து மனுக்கள் கொடுத்து பல போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். ஆனாலும் இதுவரை வருவாய்த்துறையினர் எந்த நடவடிக்கையும் வழங்கவில்லை. மேலும் விதவைகள், முதியோர் உதவித் தொகை கேட்டு கொடுக்கப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில் தமிழக அரசே அரசாணை 318-ன் படி அரசு புறம்போக்கு மற்றும் கோயில் நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு குடிமனை பட்டா வழங்கப்படும் என அண்மையில் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் அமணம்பாக்கம் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், வருவாய் ஆய்வாளர் ஜானகி பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு, தகுதியான விண்ணப்பங்களுக்கு குடிமனை பட்டா மற்றும் முதியோர் உதவித் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்தப் போராட்டத்திற்கு சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.சம்பத் தலைமை தாங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர் சி.பாலாஜி, வட்டச் செயலாளர் ஏ.ஜி.கண்ணன், வட்டக்குழு உறுப்பினர் ஆர்.மணிவண்ணன், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் எம்.பழனி, கிளைச் செயலாளர்கள் தேவேந்திரன், செல்வம், ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.