திருவள்ளூர் ஜூன் 28- ஆதார் அட்டையை அடிப்படையாக கொண்டு திருநர்களுக்கும் ரேசன் பொருட்களை வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திற்குள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திருநங்கை, திருநம்பி, ஓரினச்சேர்க்கையாளர்கள் உள்ளனர். இத்தகையோர் தங்களது வாழ்க்கையை நிலைநிறுத்த பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பெரும்பாலான திருநர்கள் எழுத்தறிவு அற்றவர்களாக உள்னர். வேலை வாய்ப்பு மறுக்கப்படுகிறது. சுயத்தொழில்கள் செய்யவும் வாய்ப்பு கிடைக்காமல் அல்லல்படுகின்றனர். பசியின் கொடுமைக்கு ஆளாகி வேறு வழியின்றி பிச்சை எடுக்கும் அவல நிலைக்கு தள்ளப்படுகின்றனர். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தில் இணைந்து பணியாற்றி வரும் திருநின்றவூர் பகுதியை சேர்ந்த எழுத்தாளர் கொற்றவை என்ற திருநங்கை கூறுகையில், “கொரோனா காலத்தில் அரசு வழங்கிய ஆயிரம் ரூபாய் அடையாள அட்டை இல்லாதவர்களுக்கும் வழங்க வேண்டும். ஊரடங்கு அமலில் உள்ளதால் பிச்சை கூட எடுக்க முடியவில்லை. பசியில் வாடும் திருநர்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும்” என்றார். “ஆதார் அட்டை அடிப்படையில் திருநங்கை உள்ளிடோருக்கு ரேசன் பொருட்களை வழங்க வேண்டும். தொகுப்பு வீடுகள் வழங்க வேண்டும். திருநங்கைகள், திருநர்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்த வேண்டும். திருநங்கைகளை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் (எம்பிசி) சேர்கின்றனர். இதனால் பெரிய அளவுக்கு பயனில்லை. எனவே,கவுரமாக வாழ்க்கை நடத்த அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்” என்றார். ஊரடங்கு காலத்தில் அடுத்த வேளை உணவிற்கே வழியின்றி திண்டாடும் திருநர்கள் இனியாவது அரசு கண்டுகொள்ளுமா? -பெ.ரூபன்