திருவள்ளூர், ஜூன் 5-கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர், நேமள்ளூர் ஆகிய பகுதிகளில் குடிநீர் பிரச்சனையை சரி செய்யக் கோரி கிராம மக்கள் கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் காலனி பகுதியில் சுமார் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த பகுதியில் கடந்த 2 வருடமாக கோடை காலத்தில் குடிநீர்பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. இந்த ஆண்டுகுடிநீர் கிடைக்காததால் கிராம மக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.இது குறித்து அதிகாரிகளிடம் தகவல்தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கிராம மக்கள் கூறுகின்றனர்.இந்நிலையில் கிராம மக்கள் காலி குடங்களுடன் கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.அதே போல கும்மிடிப்பூண்டியை அடுத்த நேமள்ளூர் இருளர் காலனியிலும் குடிநீர்தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இப்பகுதி மக்களும் காலி குடங்களுடன் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இரு கிராம மக்களையும் வட்டார வளர்ச்சிஅலுவலர் ராம்குமார் சமாதானப்படுத்தி, குடிநீர் பிரச்சனையை சரிசெய்வதாக உறுதியளித்தார். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.