tamilnadu

பொங்கல் தொகுப்பு வழங்க தாமதம்: பொதுமக்கள் ஊழியர்களுடன்  வாக்குவாதம்


திருவள்ளூர், ஜன. 9-  திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள நியாயவிலைக் கடைகளில் வியாழனன்று (ஜன. 9) காலை 9 மணிக்கு தமிழக அரசு அறிவித்த ஆயிரம் ரூபாயுடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பினை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பலராமன் வழங்குவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.  இந்த நிலையில் சட்டமன்ற அலுவல் கூட்டம் காரணமாக பலராமன் நிகழ்ச்சியில் பங்கேற்காததால் பொங்கல் தொகுப்பு அடுத்த நாள் வழங்கப்படும் என மூன்று மணி நேர காத்திருப்புக்கு பிறகு அதிகாரிகள் அறிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த பயனாளிகள் நியாய விலைக் கடை ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த உயர் அதிகாரிகள் பொதுமக்களின் எதிர்ப்பை சமாளிக்க முடியாமல் ஆயிரம் ரூபாயுடன் கூடிய பொங்கல் தொகுப்பை வழங்கினர்.