அவிநாசி அருகே குடியரசு தினத்தன்று தேசிய கொடியேற்றி பாரத மாதா படத்தை வைத்து
வணங்கிய ஊராட்சி மன்ற தலைவருக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
நாடு முழுவதும் செவ்வாயன்று குடியரசு தின விழா பெரும் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது.
இதையொட்டி அரசு அலுவலகங்கள், ஊராட்சி மன்ற அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு
இடங்களில் மூவர்ண தேசிய கொடியேற்றி, சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு வீரவணக்கங்கள்
செலுத்தப்பட்டன. இந்நிலையில், திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியத்திற்குட்பட்டது
புதுப்பாளையம் ஊராட்சி. இந்த ஊராட்சி மன்றத்தின் தலைவராக இருப்பவர் பாரதிய ஜனதா
கட்சியைச் சேர்ந்த கஸ்தூரி பிரியா.
இவர் செவ்வாயன்று குடியரசு தினத்தையொட்டி புதுப்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகம்
வளாகத்தில் தேசியக்கொடியை ஏற்றினார். இதன்பின்னர் கொடி கம்பத்தின் கீழ் பாரத மாதா காவி
கொடியுடன் உள்ள படத்தை வைத்து மலர்தூவி மரியாதை செலுத்தியுள்ளார். இச்செயலுக்கு
அவ்வூராட்சியைச் சேர்ந்த மன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சியினர் உட்பட பல்வேறு
தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்தச் செயலானது
தேசிய கொடியினை அவமதிப்பது மட்டுமின்றி, மதச்சார்பின்மைக்கு எதிரான செயலாகவும்
இருப்பதால் ஊராட்சி மன்ற தலைவர் கஸ்தூரி பிரியா மீது வழக்குப் பதிவு நடவடிக்கை எடுக்க
வேண்டும் என்றும் புகார்கள் எழத்துவங்கியுள்ளன.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அவிநாசி ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம்
கூறுகையில், ஊராட்சி மன்ற தலைவர் கஸ்தூரி பிரியாவின் செயல் கடும்
கண்டனத்திற்குரியது. தேசியக்கொடியை அவமதித்த அவர் மீது மாவட்ட ஆட்சியர் உரிய
நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.