திருப்பூர் மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்தின் அமராவதி வனச்சரகத்தில் 9 வயது மதிக்கத்தக்க ஆண் புலி வாயில் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட அமராவதி வனச்சரகத்தில் வேட்டை தடுப்பு காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கழுதகட்டி ஓடைப் பகுதியில் 9 வயது மதிக்கத்தக்க ஆண் புலி ஒன்று வாயில் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து வேட்டை தடுப்பு காவலர்கள், வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் புலியின் வாயில் காயங்கள் இருந்ததால் வேட்டையாடுபவர்களால் புலி கொல்லப்பட்டதா அல்லது இயற்கையாக உயிரிழந்ததா என்ற காரணத்தைக் கண்டறிய, வனத்துறை கால்நடை மருத்துவக் குழுவின் உதவியுடன் புலியின் சடலத்தில் உடற்கூறாய்வு மேற்கொண்டனர். உடற்கூறாய்வில், முள்ளம்பன்றியின் முட்கள் புலியின் கால் மற்றும் இரைப்பை பகுதியிலிருந்தது உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில், முள்ளம்பன்றியை வேட்டையாடும்பொழுது புலியின் முன் கால்கள் மற்றும் மார்பு பகுதியில் காயம் ஏற்பட்டு, பின்னர் காயங்களில் வீக்கம் ஏற்பட்டு உள்பகுதியில் சீல் பிடித்த நிலையில் வேட்டையாட முடியாத சூழ்நிலையில் அதன் இறப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து புலியின் சடலம், பற்கள் மற்றும் நகங்கள் ஆகியவை எரியூட்டப்பட்டது.