திருப்பூர், ஏப். 15 –
முறைசாரா தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பு ஊரடங்கு காலத்திற்கான நிவாரண உதவிகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தாலும், திருப்பூர் மாவட்டத்தில் அந்த தொழிலாளர்களுக்கு எப்போது கிடைக்கும் என்று திருப்பூர் மாவட்ட சிஐடியு கேள்வி எழுப்பியுள்ளது.
இது தொடர்பாக இந்தியத் தொழிற்சங்க மையம் (சிஐடியு) திருப்பூர் மாவட்டத் தலைவர் கே.உண்ணிகிருஷ்ணன் புதன்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கட்டுமானம், கைத்தறி, விசைத்தறி, சுமைப்பணி, ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்ட முறைசாராத் தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பு ஊரடங்கு காலத்திற்கு முதல் கட்டமாக ரூ.1000 நிவாரணம் மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி அறிவித்திருந்தார். தற்போது மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டிருக்கும் நிலையில் முறைசாராத் தொழிலாளர்களுக்கு இரண்டாவது தவணையாக மீண்டும் ரூ.1000 வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்திருக்கிறார்.
எனினும் திருப்பூர் மாவட்டத்தில் நலவாரியத்தில் பதிவு செய்திருக்கும் பெரும்பான்மை முறைசாராத் தொழிலாளர்களுக்கு முதல்வர் அறிவித்த முதல் கட்ட நிவாரணம் மற்றும் உணவுப் பொருட்கள் கூட இதுவரை வழங்கப்படவில்லை. மேலும் உணவு தானியப் பொருட்கள் இவர்களுக்கு எப்படி கொடுக்கப்படும் என்பதும் தெளிவுபடுத்தப்படவில்லை.
திருப்பூர் மாவட்டத்தில் கட்டுமானம் மட்டுமின்றி, கைத்தறி, விசைத்தறி, சுமைப்பணி, ஆட்டோ உள்பட பல்வேறு முறைசாராத் தொழில்களில் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் நலவாரிய உறுப்பினர்களாகப் பதிவு செய்துள்ளனர். இதில் தமிழக அரசு அறிவித்திருக்கும் முதல் கட்ட நிவாரணம் பெறுவதற்கு கட்டுமானத் தொழிலாளர்கள் 21 ஆயிரத்து 172 பேர் மற்றும் கட்டுமான ஓய்வூதியர், பிற மாநிலத் தொழிலாளர்கள் சுமார் 4 ஆயிரம் பேர் என சுமார் 25 ஆயிரம் பேர் மட்டுமே நிவாரண நிதி ரூ.1000 பெறுவதற்கு தகுதியுடையவர்கள் என பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான தொழிலாளர்களுக்கு இன்று வரை நிவாரணத் தொகை ரூ.1000 மற்றும் உணவு தானியப் பொருட்கள் வழங்கப்படவில்லை. சுமார் 10 சதவிகிதம் பேருக்கு மட்டுமே நிவாரணத் தொகை வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் மூலம் அறிய முடிகிறது.
இது ஒருபுறம் இருக்க கட்டுமானத் தொழிலாளர் தவிர பிற முறைசாராத் தொழிலாளர்கள் நிவாரண உதவி பெறுவதற்கான பட்டியல் இதுவரை மாநில அரசிடமிருந்து மாவட்ட நிர்வாகத்திற்கு வரவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் பட்டினியில் தவிக்கும் பல ஆயிரக்கணக்கான முறைசாரா தொழிலாளர் குடும்பங்களுக்கு எப்போது நிவாரணம் கிடைக்கும் என்ற கேள்வி எழுகிறது.
உண்மையில் நலவாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர் எண்ணிக்கை கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் மட்டும் ஏறத்தாழ 1லட்சத்து 15 ஆயிரம் பேர் வரை உள்ளனர். ஆனால் இதில் சுமார் 20 சதவிகிதம் பேர் மட்டுமே நிவாரணத் தொகை பெறுவதற்கு தகுதியுடையோர் என பட்டியல் வெளியிடுவது நியாயமானது அல்ல. இது தவிர இதர முறைசாராத் தொழில்களிலும் வேலை செய்யும் சுமார் 2 லட்சம் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்து வைத்திருக்கின்றனர். அவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்குவது வெறும் அறிவிப்பாக மட்டுமே உள்ளது.
மேற்படி நலவாரிய தொழிலாளர்களுக்கு உணவு தானியம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தாலும் அவர்களுக்கு எங்கே, எப்படி, யார் மூலம் இந்த உணவு பொருட்கள் வழங்கப்படும் என்ற தெளிவான அறிவிப்பு இல்லை. இது பற்றி மாநில அரசு விளக்கமாக தெரியப்படுத்துவதுடன், இப்போதுள்ள நெருக்கடி காலத்தில் உணவுப்பொருள் உடனடியாகக் கிடைப்பதற்கு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் கைத்தறித் தொழிலாளர்கள் நலவாரிய உறுப்பினர்களாக இருப்பதை சரி பார்ப்பதற்கு கைத்தறி கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகத் தெரிகிறது. இது சரியான நடவடிக்கை அல்ல. கைத்தறி நலவாரியத்தில் பதிவு செய்திருக்கும் அனைத்து கைத்தறி நெசவாளர்களுக்கும் நிவாரணம் கிடைப்பதை உத்தரவாதம் செய்ய வேண்டும்.
அத்துடன் கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக வேலையின்றி, வருமானம் இன்றி தொழிலாளர்கள் தவித்து வரும் நிலையில் நலவாரியத்தில் பதிவு செய்திருக்கும் அனைத்து முறைசாரா தொழிலாளர்களுக்கும் உரிய நிவாரண நிதியும், உணவுப் பொருட்களும் வழங்க வேண்டும். அதையும் காலதாமதம் செய்யாமல் வெளிப்படைத் தன்மையுடன், உடனடியாக அவர்களுக்கு நேரடியாகக் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிஐடியு மாவட்டத் தலைவர் கே.உண்ணிகிருஷ்ணன் வலியுறுத்தி இருக்கிறார்.