திருப்பூர்:
திருப்பூரில் பனியன் கம்பெனியில் புகுந்து வன்முறை வெறியாட்டம் நடத்திய இந்து முன்னணி கும்பலைக் கண்டித்து, காவல் துறையின் தடையைமீறி எதிர்க்கட்சிகளின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.கடந்த 5ஆம் தேதி விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம் நடத்தப்பட்டபோது, திருப்பூர் அங்கேரிபாளையம் சாலை வி.கே.கார்மெண்ட்ஸ் என்ற பனியன் நிறுவனத்திற்குள் இந்து முன்னணி கும்பல் அத்துமீறி அராஜகமாக நுழைந்தது. அங்கிருந்த தொழிலாளர், பணியாளர்களைத் தாக்கியதுடன் பூந்தொட்டி, ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். இந்த சம்பவம்திருப்பூர் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், இந்தியகம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் இந்து முன்னணி யின் இந்த அட்டூழியத்தைக் கண்டித்தும், காவல் துறை சமூக விரோதி களைக் கைது செய்யக் கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்தனர். ஆனால் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்தது.இதற்குக் கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சிகள், மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் துணை ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளைச் சந்தித்து ஜனநாயகப்படி இயக்கம் நடத்த அனுமதி மறுப்பது சரியல்ல, வன்முறைக் கும்பலை பாரபட்சம் இல்லாமல் கைது செய்து தண்டிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். அத்துடன் சம்பவம் நடைபெற்ற அங்கேரிபாளையம் பகுதியில் பொதுக் கூட்டம் நடத்த இக்கட்சிகள் திட்டமிட்டன. அதற்கும் காவல்துறை அனுமதி மறுத்தது. இந்நிலையில், இந்து முன்னணி அமைப்பு மக்கள் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் வகையிலும், தொழில் அமைதியைக் கெடுக்கும் வகையிலும் வன்முறை வெறியாட்டம் நடத்தியதைக் கண்டித்தும், சட்டப்படி வன்முறை கும்பல் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் செப். 17ஆம் தேதியன்று ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி செவ்வாயன்று காலை திமுக, சிபிஎம், காங்கிரஸ், சிபிஐ மற்றும்மதிமுக ஆகிய கட்சிகளைச் சேர்ந்த ஊழியர்கள் பெருந்திரளானோர் மாநகராட்சி முன்பாக திரண்டனர். காவல்துறை உதவி ஆணையர் நவீன்குமார்தலைமையில் ஏராளமான காவலர் களும் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர்.திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் க.செல்வராஜ், மார்க்சிஸ்ட் கட்சியின்மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், காங்கிரஸ் சார்பில் அ.ராம சாமி, சிபிஐ வட்டச் செயலாளர் எம்.ரவி, மதிமுக சார்பில் சம்பத் உள்ளிட்ட அக்கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.இதில் இந்து முன்னணியைக் கண்டித்தும், காவல் துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதையடுத்து திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் க.செல்வராஜ் பேசினார். திருப்பூர் நகரின் அமைதியைப் பாதுகாப்பதில் அக்கறையுள்ள அரசியல் கட்சிகள் ஜனநாயக முறைப்படி இயக்கம் நடத்த அனுமதி கேட்டால் அனுமதி மறுக்கும்காவல் துறை, பல நாட்கள் நகர மக்களை அலைக்கழித்து, தெருத் தெருவாகவிநாயகர் சிலை வைத்து, ஊர்வலம் என நகரின் மொத்த போக்குவரத்தையும் முடக்கும் அராஜக நடவடிக்கையை கட்டுப்படுத்தவோ, தடுக்கவோ நட வடிக்கை எடுப்பதில்லை. இந்த இயக்கத்திற்கும் முறைப்படி அனுமதி கேட்டு கடிதம் கொடுத்தபோதும், காவல் துறையினர் உரிய பதில் அளிக்காமல் அலைக்கழித்தனர். மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் உள்ளிட்ட உயரதிகாரிகளைச் சந்தித்து பேசி அனுமதி தருவதாகச் சொன்னபிறகும் காவல் துறையின் செயல்பாடுபாரபட்சமாக இருப்பது கண்டிக்கத் தக்கது என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் செல்வராஜ் பேசியபோது காவல் துறையினர் குறுக்கிட்டு ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதிஇல்லை என்று கூறினர். இதையடுத்து அங்கிருந்த தலைவர்கள் காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். காவல் துறையைக் கண்டித்து தொண்டர்கள் கோபாவேச முழக்கம்எழுப்பினர். இந்நிலையில் கோரிக்கை களை வலியுறுத்தி வெற்றிகரமாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது எனக் கூறி தலைவர்கள் போராட்டத்தை நிறைவு செய்தனர். (ந.நி.)