tamilnadu

img

ஏலச்சீட்டில் பல கோடி மோசடி செய்து தலைமறைவான பாஜக பிரமுகர் கைது!

திருப்பூர்,அக்டோபர்.27- திருப்பூர், கருமாரம்பாளையம் பகுதியில் ஏலச்சீட்டு நடத்தி  கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்து, தலைமறைவான பாஜகவைச் சேர்ந்த செந்தில்குமாரை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருப்பூர் மாநகரம் ஊத்துக்குளி சாலை, மண்ணரை, சத்யா காலனி, ரேவதி தியேட்டர் காம்பவுண்ட் பகுதியில் குடியிருந்து வந்தவர் மு.செந்தில்குமார் (வயது 45). பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த இவர் திருப்பூர் ஊத்துக்குளி சாலை, கருமாரம்பாளையம், நேதாஜி நகரில் அலுவலகம் வைத்து ஸ்ரீ பரமேஸ்வரா குரூப்ஸ் என்ற பெயரில் சீட்டு நிறுவனம் நடத்தி வந்துள்ளார். மேற்படி சீட்டு நிறுவனம் மூலமாக தீபாவளி சிறுசேமிப்பு திட்டம் என்ற பெயரில் வாராந்திர சீட்டும், ஏலச் சீட்டும் நடத்தி வந்துள்ளார். இவர் நடத்தி வந்த சீட்டில் திருப்பூர் மாநகரில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் சேர்ந்து சீட்டு தொகையை வாரந்தோறும், மாதந்தோறும் என பல்வேறு வகையில் செலுத்தி வந்துள்ளனர். அந்த சீட்டுத் தொகையை செந்தில்குமார் வசூல் செய்து சீட்டு அட்டையில் கையெழுத்து போட்டு கொடுத்துள்ளார். இவர் 100க்கும் மேற்பட்டவர்களிடம் தீபாவளி சிறுசேமிப்பு திட்ட சீட்டிலும், ஏலச் சீட்டிலும் ஒரு கோடிக்கு மேல் வசூல் செய்து கொண்டு பணத்தைத் திருப்பி தராமல் ஏமாற்றி தலைமறைவு ஆகிவிட்டார்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்கள், குறிப்பாக பெண்கள், மோசடி செய்தவரை கண்டுபிடித்து தங்கள் பணத்தை மீட்டு தர வேண்டும் என்று வலியுறுத்தி, கடந்த வாரம் கருமாரம்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாநகர காவல் ஆணையர் லட்சுமி உத்தரவின் பேரில், மாநகர மத்திய குற்ற பிரிவில், மோசடி செய்து தலைமறைவான செந்தில்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மத்திய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் தாமோதரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் புலன் விசாரணை செய்து கடந்த சனிக்கிழமை தலைமறைவாக இருந்த செந்தில்குமாரை கைது செய்தனர். குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 1 இல் செந்தில்குமாரை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாநகர காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.