tamilnadu

உப்பில்லா சாயம் திருப்பூரில் புதிய தொழில்நுட்பம் அறிமுகமாகிறது

திருப்பூர், மே 4 –திருப்பூர் சாயத் தொழில் துறையில் உப்பு இல்லாமல் சாயமேற்றும் புதிய தொழில்நுட்பம் மே 15ஆம் தேதி சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்படுகிறது. திருப்பூர் பின்னலாடை சாயத் தொழில்துறையில், பலவண்ண துணிகளாக சாயமேற்ற வேதி உப்பு ஆதாரமாக பயன்படுத்தப்படுகிறது. சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பு செய்வதில் நிறத்தை நீக்கினாலும் கழிவுநீரில் உள்ள உப்புத்தன்மையை நீக்குவதுதான் மிக முக்கியமான சுத்திகரிப்பு பணியாகும். கடினத்தன்மை கொண்ட இந்த உப்புநீரை நிலத்திலும், நீர்நிலையிலும் வெளியேற்றுவதால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுகிறது. எனவேசாயக்கழிவுநீரில் வண்ணங்களையும், உப்புத்தன்மையையும் முழுமையாக நீக்குவதற்கு மறுசுழற்சி தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. எனினும் இந்த தொழில்நுட்ப முறையிலும் அடர் உப்பு கடைசியாக தேங்குவதை தவிர்க்க முடிவதில்லை. அதை எப்படி சுத்திகரிப்பது என்பதுதொடர்ந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் உப்பு இல்லாமல் சாயமேற்றும் புதியதொழில்நுட்பம் தற்போது அறிமுகப்படுத்துவது திருப்பூர்பின்னலாடைத் தொழில் துறைக்கு மிகப்பெரும் வளர்ச்சிக்கான வாய்ப்பாக அமையும். சூழல் பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்கும். முதலிபாளையத்தில் இயங்கிவரும் அட்டல் இன்குபேஷன் மையம், உப்பு இன்றி சாயமேற்றும் நுட்பத்தை, திருப்பூர் சாயஆலை துறையில் புகுத்துவதற்கு முயற்சி செய்கிறது. இதற்காக, மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும், மத்திய அரசின் சிர்காட் (சென்ட்ரல்இன்ஸ்டிடியூட் பார் ரிசர்ச் ஆன் காட்டன் டெக்னாலஜி) உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி உப்பு இன்றி சாயமேற்றும் தொழில்நுட்பத்தின் சோதனை ஓட்டம், வரும் 15ஆம் தேதி நடைபெற உள்ளது, திருப்பூர் முருகம்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் சாயஆலையில், 19ஆம் தேதி வரை, தொடர்ந்து நான்கு நாட்கள், இந்த சோதனை நடத்தப்பட உள்ளது.இதற்காக, சிர்காட் தலைமை விஞ்ஞானி ராஜா தலைமையிலான விஞ்ஞானிகள் குழுவினர், இங்கு வருகின்றனர். உப்புக்கு பதில், சில வேதி பொருட்களை சேர்த்து உப்பு இல்லாத புதிய தொழில்நுட்பத்தால், 90 சதவிகித சாயம் பயன்படுத்தப்படும். இதனால், சாயம் வீணாவது தடுக்கப்பட்டு சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்னைகளும் தடுக்கப்படும். சோதனை ஓட்டத்தில், எந்தெந்த நிறத்துக்கு எவ்வளவு வேதி பொருட்கள் பயன்படுத்த வேண்டும். எத்தகைய நுட்பங்களை பயன்படுத்த வேண்டும்உள்ளிட்ட அம்சங்கள் கணிக்கப்பட்டு, கணக்கீடுகள் உருவாக்கப்பட உள்ளன. இந்த சோதனை வெற்றிகரமாக முடிந்தபின், உப்பு இன்றி சாயமேற்றும் நுட்பத்தை, அனைத்து சாய ஆலைகளிலும் செயல்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படும் என்று அடல் இன்குபேஷன் மைய நிர்வாகி பெரியசாமி தெரிவித்துள்ளார்.