திருப்பூர், மே 3 –திருப்பூரில் பெண் காவலர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.ஈரோடு மாவட்டம் ரெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முகமது இப்ராகிம். இவரது மகள் பர்வின் பாவி. இவர் 2017 ஆம் ஆண்டு தமிழக காவல் துறை பணியில் சேர்ந்தார். 2018ஆம் ஆண்டு முதல் திருப்பூர் மாவட்ட காவல் துறையில் பணியாற்றி வந்தார். தற்போது பல்லடம் தாலுகா அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அறையின் பாதுகாப்புப் பணியில் நியமிக்கப்பட்டிருந்தார். வியாழனன்று பணி முடிந்து பிற்பகல் 2.30 மணிக்கு திருப்பூர் நல்லூர் அடுத்த திருநகர் பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு வந்திருக்கிறார்.இந்நிலையில் வீட்டில் திடீரென இவர் விஷம் குடித்ததாகக் கூறப்படுகிறது. மயங்கிய நிலையில் இருந்த பர்வீன் பாவியை அக்கம்பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேல் சிகிச்சைக்காக பின்னர் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். எனினும் சிகிச்சை பலனளிக்காமல் அங்கு அவர் உயிரிழந்தார். இவரது மரணம் குறித்து திருப்பூர் ஊரக காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.