tamilnadu

img

பணமதிப்பு நீக்க எதிர்ப்பு போராட்டத்தின்போது பொய் வழக்கில் சிக்க வைக்கப்பட்ட மார்க்சிஸ்ட் கட்சியினர் விடுதலை

திருப்பூர், ஏப்.10 -திருப்பூரில் பண மதிப்பு நீக்கத்தை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டத்தில் பங்கேற்றதால், பொய் வழக்கில் சிக்கவைக்கப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 5 முன்னணி ஊழியர்களை நீதிமன்றம் விடுதலை செய்தது.கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி பிரதமர் மோடி ரூ.500, ரூ.1000 செல்லாது என்று அறிவித்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து நாடு முழுவதும் சாமானிய மக்கள், சிறு, குறு தொழில், வர்த்தகத் துறையினர் உள்ளிட்டோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். குறிப்பாக பின்னலாடைத் தொழில் நகரமான திருப்பூரில் கடுமையான நெருக்கடி நிலை ஏற்பட்டது.இதையடுத்து மோடியின் இந்த தான்தோன்றித்தனமான அறிவிப்பை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் மற்றும் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து பேசி, நவம்பர் 23ஆம் தேதி பொது வேலைநிறுத்தம், கடையடைப்புப் போராட்டத்தை நடத்தினர்.திருப்பூர் மாவட்டத்தில் இந்த போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த போராட்டத்தின்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னணி ஊழியர்களை காவல் துறையினர் கைது செய்தனர். இதில் திருப்பூர் வடக்கு மாநகருக்கு உட்பட்ட குமரானந்தபுரம், முருங்கப்பாளையம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த எம்.ஜீவானந்தம், சிவதாஸ், சுரேஷ், தீபன் கார்த்திக்ராஜ், திலீப் குமார் ஆகிய ஐந்து பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.இவர்கள் மீது பொதுச் சொத்துகளை சேதப்படுத்தியது, கொலை மிரட்டல் விடுத்தது, காயம் ஏற்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஒவ்வொருவர் மீதும் தலா 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட இரண்டாவது அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. திருப்பூர் மாவட்ட அகில இந்திய வழக்கறிஞர் சங்கத் தலைவர் பி.மோகன் ஆலோசனையுடன், மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் எஸ்.பொன்ராம், வழக்கறிஞர் வை.ஆனந்தன் ஆகியோர் மார்க்சிஸ்ட் கட்சியின் ஊழியர்கள் தரப்பில் வாதாடினர்.இதில் அரசுத் தரப்பில் பொய்யான குற்றச்சாட்டில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாக வாதிட்டனர். இந்நிலையில் செவ்வாயன்று இரண்டாவது மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மாவட்ட நீதிபதி முகமது ஜியாவுதீன் இவ்வழக்கில் தீர்ப்பளித்தார். இதில் அரசுத் தரப்பில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மீது குற்றச்சாட்டை சந்தேகத்துக்கு இடமின்றி தெளிவாக நிரூபிக்கப்படவில்லை என்று கூறி ஐந்து பேரையும் விடுதலை செய்வதாக தீர்ப்பளித்தார். இதையடுத்து ஐந்து பேரும் விடுவிக்கப்பட்டனர். புதன்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் கட்சியின் திருப்பூர் வடக்கு மாநகரச் செயலாளர் பி.முருகேசன் தலைமையில் பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் ஆகியோர் பொய் வழக்கில் விடுதலையான எம்.ஜீவானந்தம், சிவதாஸ், சுரேஷ், தீபன் கார்த்திக்ராஜ், திலீப்குமார் ஆகியோருக்கு துண்டு அணிவித்து பாராட்டுத் தெரிவித்தனர். அத்துடன் இந்த பொய் வழக்கில் திறம்பட வாதாடி கட்சி ஊழியர்கள் விடுதலை பெறுவதற்கு பணியாற்றிய வழக்கறிஞர்கள் பி.மோகன், எஸ்.பொன்ராம், வை.ஆனந்தம் ஆகிய மூவருக்கும் பாராட்டும், நன்றியும் தெரிவிக்கப்பட்டது.தற்போது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் நிலையில், மோடி அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றதால் பொய் வழக்கில் கைது செய்யப்பட்ட தோழர்கள் விடுதலை அடைந்திருக்கின்றனர். இது களப்போராட்டத்தில் பங்கேற்போருக்கு உற்சாகத்தையும், ஊக்கத்தையும் அளிக்கக்கூடியது. மக்களுக்கு எதிரான கொள்கைகளை, ஆட்சியாளர்களின் அநீதியை எதிர்த்து தொடர்ந்து போராடுவோம் என்று தலைவர்கள் குறிப்பிட்டனர்.இந்நிகழ்வில் கட்சியின் வடக்கு ஒன்றியச் செயலாளர் கே.பழனிச்சாமி, வாலிபர் சங்க வடக்கு மாநகரச் செயலாளர் கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.