தாராபுரம், ஏப். 26 - தாராபுரத்தில், விவசாயிகளிடம் நெல்கொள்முதல் செய்த அரசு வங்கி கணக்கில் பணம் அனுப்பாமல் தாமதித்து வருகிறது. தாராபுரம் பழைய மற்றும் புதிய அமராவதி பாசன பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெல் அறுவடை செய்யப்பட்டது. அலங்கியம், சத்திரம், தேவநல்லூர் பகுதிகளில் அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது.அறுவடை செய்யப்பட்ட நெல்லை அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் அமைத்து வாங்குகின்றன. அலங்கியம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொளத்துப்பாளையம் பகுதிக்கான நெல்கொள்முதல் நிலையமும், அலங்கியம் பகுதிக்கான நெல் கொள்முதல் நிலையமும் ஒரே வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 300 விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை அரசு நெல் கொள்முதல் நிலையத்திற்கு விற்பனை செய்தனர். ஆனால் இதுவரை 125 விவசாயிகளுக்கு மட்டும் வங்கி கணக்கில் மட்டுமே நெல் கொள்முதலுக்கான தொகை கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. தேர்தலை முன்னிட்டு இதர பணிகளுக்காக அலுவலர்கள் அனுப்பப்பட்டதால் பணம் அனுப்புவதில் தாமதமானது. இதுகுறித்து நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளருக்கு புகார் அளித்து இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி விவசாயிகள் சார் ஆட்சியர் பவன்குமாரிடம் மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட சார் ஆட்சியர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.