திருப்பூர், ஏப். 5 -
திருப்பூரில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதற்காக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இங்கு வந்தபோது அவர் செல்லும் வழிநெடுக பிளீச்சிங் பவுடர் தூவி மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டு இருந்தது. மாநகராட்சி ஆணையர் சிவக்குமார் திருப்பூர் தெற்குத் தொகுதியில் உதவித் தேர்தல் நடத்தும் அலுவலராக இருக்கும் நிலையில், அவரது தலைமையிலான நிர்வாகத்தில் இருக்கும் மாநகராட்சி பணியாளர்கள் தூய்மைப்பணி மேற்கொண்டது அப்பட்டமான தேர்தல் விதிமீறல் ஆகும். எனினும் தேர்தல் பறக்கும் படையோ, கண்காணிப்பு நிலைக்குழுவோ இதன் மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.புதனன்று மாலை திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட மாஸ்கோ நகர், வடக்குத் தொகுதிக்கு உட்பட்ட கொங்கு மெயின் ரோடு சின்னச்சாமியம்மாள் பள்ளி அருகில் என இரு இடங்களில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரம் செய்தார்.தேர்தல் நடத்தை விதி நடைமுறையில் இருக்கும் நிலையில் துணை முதல்வர் என்ற பதவிக்காக மாநகராட்சி நிர்வாகம் எவ்வித தனி சிறப்பு ஏற்பாடுகளும் செய்யக் கூடாது. அவரும் பிற அரசியல் கட்சி தலைவர்களைப் போல்தான் பாவிக்கப்பட வேண்டும். ஆனால் மாஸ்கோ நகர், காலேஜ் ரோடு, லட்சுமி நகர், சின்னச்சாமியம்மாள் பள்ளி பகுதி என பன்னீர்செல்வம் பயணம் செய்த சாலை முழுவதும் இருபுறமும் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டு பிளீச்சிங் பவுடர்தூவப்பட்டு இருந்தது.
அத்துடன் மாஸ்கோ நகர் பகுதியில் அனுமதி பெறாமல் தனி மேடை அமைத்தும், பன்னீர்செல்வத்தை வரவேற்று அலங்கார பிளக்ஸ் பேனர்கள் கட்டியும், வழி நெடுக அதிமுக கொடி கட்டியும் வைத்திருந்தனர்.இதில் பன்னீர்செல்வத்துக்கு வரவேற்பு விளம்பர பிளக்ஸ் மற்றும் மேடை அமைத்ததற்காக தேர்தல் நடத்தை விதியை மீறியதாக 13ஆவது வார்டு அதிமுக முன்னாள் கவுன்சிலர் சேகர் மீது திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதேசமயம் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் வழிநெடுக தூய்மைப் பணி மேற்கொண்டது தொடர்பாக சம்பந்தப்பட்ட மாநகராட்சி அலுவலர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குறிப்பாக தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ சு.குணசேகரன் ஏற்கெனவே மாநகராட்சி துணை மேயராக இருந்த நிலையில் அவரது உத்தரவின்பேரில்தான் மாநகராட்சி அலுவலர்கள் இது போல் துணை முதல்வர் வருகைக்கு தூய்மைப் பணி செய்ததாக மாநகராட்சி வட்டாரத்தினர் தெரிவித்தனர். ஆனால் விதி மீறிய அவர்கள் மீது மாநகராட்சி ஆணையர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் எந்த விசாரணையோ, தேர்தல் நடத்தை விதிமீறலுக்கான நடவடிக்கையோ எடுக்கவில்லை.
காசு கொடுத்து கூட்டம் சேர்ப்பு
திருப்பூரில் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்ட பிரச்சார கூட்டத்தில் பெண்கள் கூட்டம் அதிகமாக திரட்டப்பட்டிருந்தது. அங்கு வந்திருந்த பெண்களிடம் செய்தியாளர்கள் விசாரித்தபோது, கூட்டத்தில் பங்கேற்றால் ரூ.200 தருவதாக கூறி அழைத்து வந்தனர். எங்களுக்கு டோக்கன் கொடுத்திருக்கிறார்கள். கூட்டம் முடிந்து எங்கள் குடியிருப்புக்குச் சென்ற பின் டோக்கனுக்குப் பணம் தருவார்கள் என்றனர். அதிமுக கிளைச் செயலாளர் ஒருவரின் மனைவி டோக்கன் கொடுத்து இதுபோல் 700 பெண்களை அழைத்து வந்ததாகக் கூறினார். நாங்க என்ன ஓட்டா போடப்போறோம், 200 ரூபாய் தருகிறார்கள் என்பதால் வந்தோம் என்று சொன்ன பெண்கள் பலர் ஓ.பன்னீர்செல்வம் பேசிக் கொண்டிருக்கும்போதே மெல்ல கலைந்து சென்று கொண்டிருந்தனர்.இந்த கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம் அதிமுக அரசின் செயல்பாடுகள் பற்றி மட்டும் பேசினார். நடப்பது நாடாளுமன்றத் தேர்தலாக இருக்கும் நிலையில் தனது கூட்டணிக் கட்சியான பாரதிய ஜனதாவின் சாதனைகளைப் பற்றி சொல்வதற்கு எதுவும் இல்லாததால், திருப்பூரில் மோடி பெயரைச் சொன்னால், அதிமுகவுக்கு கிடைக்கும் கொஞ்சநஞ்சம் ஓட்டும் கிடைக்காமல் போய்விடும் என்று நினைத்து மோடி பெயரை உச்சரிக்காமல் கவனமாகத் தவிர்த்தார். இரண்டு இடங்களிலும் அவர் மோடி பெயரை சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.