tamilnadu

சட்டவிரோதமாக அடைக்கலமாகும் வெளிநாட்டினர் பிரச்சனை திருப்பூரில் சம்பிரதாயத்துக்கு நடத்தப்பட்ட கலந்தாய்வுக் கூட்டம்

திருப்பூர், ஜூன் 1 –திருப்பூர் மாநகரில் சட்டவிரோதமாக அடைக்கலமாகும் வங்கதேசத்தவர் உள்ளிட்ட வெளிநாட்டினர் பிரச்சனை குறித்து காவல் துறை சார்பில் சம்பிரதாயத்துக்கு கலந்தாலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. திருப்பூர் 15 வேலம்பாளையம் காவல் எல்லைக்கு உட்பட்ட சிறுபூலுவபட்டி அத்திமரத்தோட்டம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வங்கதேசத்தைச் சேர்ந்த 19 பேர் முறையான ஆவணங்கள் இல்லாமல் இங்கு தங்கியிருந்து பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த 19 பேரையும் காவல் துறையினர் கைது செய்து சென்னை புழல் சிறைக்கு அனுப்பி வைத்தனர்.இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் 19 பேரும் போலியான ஆதார் கார்டுகள் வைத்திருந்தது தெரியவந்தது. எனவே குடியுரிமை இல்லாத வெளிநாட்டினர் எளிதில் இதுபோல் திருப்பூருக்குள் ஊடுருவி தங்கியிருப்பது உறுதியாகிறது. இதற்கு முன்பு வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த தீவிரவாத அமைப்புகளில் தொடர்புடையவர்கள் இங்கு தங்கியிருந்ததும், நக்சல் அமைப்புடன் தொடர்புடையவர்கள் இங்கு தங்கியிருந்ததும், நைஜீரியா நாட்டில் இருந்து வந்தவர்கள் முறையான பாஸ்போர்ட், விசா இல்லாமல் இங்கு வந்து ஆண்டுக்கணக்கில் தங்கியிருந்ததும் அவ்வப்போது கண்டறியப்பட்டுள்ளது.எனினும் வெளி மாநிலத்தவர் மற்றும் வெளிநாட்டினர் திருப்பூரில் வந்து தங்கி வேலை செய்வதும், பிற பகுதிகளில் சட்டவிரோத காரியங்களில் ஈடுபட்டுவிட்டு இங்குவந்து தலைமறைவாக இருப்பதும் இப்போதும் தொடர்கதையாகவே நீடிக்கிறது.ஆனால் சமீபத்தில் 19 வங்கதேசத்தவர் கண்டறியப்பட்டது போல, பரபரப்பு ஏற்படும் சமயங்களில் மட்டும் காவல் துறையினர் உடனடியாக ஒரு கூட்டத்தை நடத்துவார்கள்.

அதில் இங்குள்ள தொழில் அமைப்புகளின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி பனியன் நிறுவனங்களில் வேலை செய்யும் வெளி மாநில, வெளிநாட்டினர் விபரங்களை பதிவு செய்து வைத்து, காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்துவார்கள். சிறிது காலத்துக்கு பிறகு இப்பிரச்சனை மறக்கப்பட்டு விடும். கடந்த 31ஆம் தேதி (வெள்ளியன்று) மாநகர காவல் ஆணையர் தலைமையில் தொழில் அமைப்பு பிரதிநிதிகள் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதில் கணினிமயம் மூலம் வெளிமாநிலத் தொழிலாளர் விபரங்களைப் பதிவேற்றம் செய்து ஒருங்கிணைந்த முறையில் கண்காணிப்பது பற்றி தெரிவிக்கப்பட்டு உள்ளது. நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இதுபோன்ற கண்காணிப்பு செய்வது ஊடுருவல்காரர்களைக் கட்டுப்படுத்த உதவும் என்பது உண்மைதான். ஆனால் இந்த விசயத்தில் தொழில் அமைப்பினர் மட்டுமின்றி, திருப்பூரின் பொது சமூகத்தின் பங்கேற்பும் முக்கியம் என்பதை காவல் துறை மட்டுமின்றி, அரசு நிர்வாகமும் கவனத்தில் கொள்ள வேண்டும்.இதை தொழில் நிறுவனத்தார், வெளிநாட்டினர் என்ற பிரச்சனையாக மட்டும் அணுகுவது பொருத்தமாக இருக்காது. உதாரணத்துக்கு இதுபோன்ற கலந்தாய்வு கூட்டங்களை நடத்தும்போது கடந்த காலங்களில் தொழிற்சங்கத்தினரை அழைத்து ஆலோசனை பெறும் நடைமுறையை அரசு நிர்வாகம் பின்பற்றியுள்ளது. ஆனால் இப்போது தொழிற்சங்கத்தினரை, அரசியல் கட்சியினரை அழைப்பதோ, கருத்துக் கேட்பதோ இல்லை.தொழில் அமைப்புகளுக்கும், பெரும்பாலான தனிப்பட்ட தொழில் முனைவோருக்கும் கூட தொடர்பில்லாத நிலையே உள்ளது. எனவே அமைப்புகளுடன் பேசுவது எந்த அளவுக்கு அனைத்துத்தரப்பினரையும் சென்றடையும் என்பதும் கேள்விக்குறியே. மேலும் இதுபோன்ற கூட்டங்கள் நடத்தும்போது ஊடகங்களுக்குக்கூட தகவல் தெரிவிக்காமல், கூட்டம் முடிந்தபிறகு ஒரு செய்தியாக மட்டுமே தரும் அணுகுமுறையை காவல் துறை பின்பற்றுகிறது. எனவே இதுபோன்ற கூட்டங்கள் சம்பிரதாயமாக நடத்தப்படுகிறதோ என்ற ஐயம் எழுகிறது.ஏனென்றால் தொழிலாளர்களுக்கு வேலை வழங்கும் தொழில் துறையினரைப் பொறுத்தவரை அவர்கள் தொழிலாளர்களின் பின்னணி விபரங்களைக் கருத்தில் கொள்வதில்லை. ஆள்பற்றாக்குறை இருக்கும் சூழலில் அல்லது குறைந்த கூலிக்கு வேலை செய்ய வெளிமாநிலத்தவர்கள் கிடைக்கின்றனர் என்ற நிலையில் அவர்களது முழுவிபரங்களைப் பெற்று ஆவணங்களைச் சரி பார்ப்பதைப் பற்றி யோசிப்பதில்லை. இதை ஊடுருவல்காரர்கள் பயன்படுத்திக் கொள்ள ஏதுவாகிறது.அதுமட்டுமின்றி புலம் பெயர்ந்து வரும் தொழிலாளர்களுக்கான சட்டம் 1978 உள்ளது.

இந்த சட்டப்படி தொழிலாளர் பதிவு மட்டுமின்றி அவர்களது சமூகப் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தவும் இடம் உள்ளது. ஆனால் இதைப் பற்றி தொழில் அமைப்புகளோ, தொழிலாளர் நலத்துறையோ வாய் திறப்பதில்லை. சிஐடியு, ஏஐடியுசி போன்ற தொழிற்சங்கங்கள் இச்சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகின்றன. மேலும் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை தர வேண்டும் என்ற தொழிற்சங்கங்களின் கோரிக்கையை நிறைவேற்றினால் தொழிலாளர் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்.அதேசமயம் ஊடுருவல்காரர்களை தனிமைப்படுத்தவும் இது வழி செய்யும். ஆனால் அடையாள அட்டை தருவது தொழிலாளர்களுக்கு உரிய சட்ட உரிமைகளைத் தர வேண்டியிருக்கும் என்பதால், அதை தவிர்ப்பதற்காகவே தொழில் அமைப்பினர் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை தர மறுக்கின்றனர்.இது தவிர திருப்பூர் போன்ற ஏற்றுமதி நகரத்தில், நைஜீரியர்கள், வங்கதேசத்தவர் போன்ற வெளிநாட்டினர் மட்டுமின்றி வெளி மாநிலத்தவர்கள் அதிகளவு வருகை தருவதை குறுகிய அடையாள அரசியலைப் பின்பற்றும் அரசியல் சக்திகள் பயன்படுத்தி பதற்றத்தை ஏற்படுத்த முயல்வதும் அதிகரிக்கிறது.எனவே இது போன்ற பிரச்சனைகளில் சம்பிரதாயப்பூர்வ கண்துடைப்பு நடவடிக்கைகளைக் கைவிட்டு சமூக, தொழில், அரசியல் அமைப்புகளின் ஒருங்கிணைந்த பங்கேற்புடன் ஆக்கப்பூர்வ முயற்சிகளை மேற்கொள்ள அரசு நிர்வாகம் முன்வர வேண்டும். இது ஒருபுறம் சட்டவிரோத, சமூக விரோத ஊடுருவல்களைத் தடுப்பதுடன், இந்நகரின் ஏற்றுமதி தொழில், பொருளாதார நடவடிக்கைக்கும் தீங்கிழைக்காமல் தடுக்கும். முன்வருமா அரசு நிர்வாகம்?   (ந.நி)