திருநெல்வேலி:
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக ஜனவரி மாதம் வரை வடகிழக்கு பருவமழை பெய்தது. மழை காரணமாக குற்றாலத்தின் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதன் காரணமாக அவ்வப்போது சுற் றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
ஜனவரி மாதம் இறுதியில் மழை ஓய்ந்தநிலையில் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில்கடும் பனிப்பொழிவும், பகல் நேரங்களில் கோடையை மிஞ்சிய வெயிலும் அடித்து வந்தது. ஒருமாதத்திற்கு மேலாக இதே நிலை நீடித்து வந்தநிலையில் தென்காசி மாவட்டத்தில் நேற்று சில இடங்களில் பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக சிவகிரியில் 5 மில்லிமீட்டர் மழை பதிவானது.சனிக்கிழமை காலை முதலே மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழைபெய்தது. குறிப்பாக ஆலங்குளம், பாவூர்சத்திரம், சங்கரன்கோவில், சிவகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்தது. ஒரு சில இடங்களில் பெய்த மழை காரணமாக சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது.
மலைப் பகுதியில் பெய்த மழை காரணமாக குற்றால அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இந்நிலையில் இன்று காலை மெயினருவியில் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக பாதுகாப்பு கருதி இன்று காலை 10 மணி முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.