tamilnadu

img

சாதி வெறிக் கொலைகள்: பாரதி மண்ணுக்கு அவமானம்

திருநெல்வேலி:
வண்ண வண்ண கயிறுகளை கைகளில் கட்டிவிட்டு சாதிய விரசத்தையும் மோதலையும் உருவாக்குகிறார்கள். அதற்கு முடிவுகட்ட அனைவரும் ஒன்றுபட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அழைப்பு விடுத்தார்.நெல்லையில் நடந்த அசோக் படுகொலைகண்டன பொதுக்கூட்டத்தில் பங்கேற்று கே.பாலகிருஷ்ணன் மேலும் பேசியதாவது: 

சரியாக ஒரு மாதத்துக்கு முன்பு இதே நேரத்தில் தோழர் அசோக் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அதற்குஎதிரான கண்டனக்குரல் இந்தியாவின் எட்டுத் திக்கும் எதிரொலித்தது. அனைத்து சமூகத்தினருக்கும் ஓடிஓடி உழைத்தவர் அசோக். அதன்மூலம் 26 வயதில் இமயமாக உயர்ந்து நின்றவர் அசோக். நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகள்-அமைப்புகள் இளைஞர்களை எந்தெந்த பாதையிலோ அழைத்துச் சென்று கொண்டிருக்கின்றன.

கம்யூனிஸ்ட் யார்? 
நாகையில் முஸ்லிம்கள் மாட்டுக்கறி சூப் அருந்தினார்கள் என்று கூறி கும்பல் தாக்குதலில் இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி இன்றைய தினம் ஈடுபட்டுள்ளனர். குடிப்பழக்கத்திற்கு, தவறான பாதைகளுக்கு சிலர் இட்டுச் செல்கிறார்கள். இளைஞர்கள் இத்தகைய சாதி மத பிரிவினைகளுக்குள் சிக்கி சிதைந்து சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு நேர்மாறாக அசோக் அற்புதமான தியாகியாக வளர்ந்திருப்துதான் செங்கொடி இயக்கத்திற்கும் மற்றவர்களுக்கும் உள்ள வித்தியாசம். யார்
கம்யூனிஸ்ட் என்பதற்கு சீன தலைவர் ஒருவர்கூறுகிறார், இன்பத்தை அனுபவிக்கும்போது கடைசியாகவும், துன்பத்தை அனுபவிக்கும்போது முதலிலும் நிற்பவன் கம்யூனிஸ்ட் என்று. அதற்கு உதாரணமாக திகழும் தியாகிகள் நிறைந்த இயக்கம் இது. ஆண்களுக்கு இணையாக பெண்களும் தியாகத்தில் சளைத்தவர்கள் அல்ல என்பதற்கு உதாரணம் தோழர் லீலாவதி.

முதல்வரின் பொறுப்பற்ற பதில்
திரும்பத்திரும்ப அடித்துக்கொண்டும் வெட்டிக்கொண்டும் இருந்தால் அந்த ஆயுதங்கள் எங்களுக்கு கிடைக்காதா. எங்களை அந்த நிலைக்கு தள்ளிவிட வேண்டாம். திருநெல்வேலி மாவட்டத்தில் 480 தீண்டாமை வன்கொடுமை வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவற்றின் மீது காவல்துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்தியாவிலேயே திறமையான காவல்துறை ஏன் அமைதியாக இருக்கிறது. தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நடக்கும் தாக்குதல்களில் உரியநடவடிக்கை இல்லை. இதற்கு அந்த துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர்தான் பதிலளிக்க வேண்டும். இது குறித்து இங்கு வந்த தமிழக முதல்வரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது சாதிய படுகொலைகள் எப்போதும் நடப்பதுதானே என்று பதிலளித்திருக்கிறார். இதற்கா ஒரு முதலமைச்சர்? இத்தகைய படுகொலைக்கு வேதனை தெரிவித்த மாவட்ட ஆட்சியரை பாராட்டுகிறேன். சாதிய மோதல்களை தடுக்க வேண்டும். அதற்காக நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். இந்த கூட்டம் அசோக்கிற்கு அனுதாபம் தெரிவிப்பதற்காக நடத்தப்படுவதல்ல. அல்லது அவரது குடும்பத்திற்கு ஏதோ 5 லட்சம் ரூபாய்கொடுப்பதற்காக நடத்தப்படுவதும் அல்ல. இந்த பணம்அவனது கால்தூசிக்குகூட சமமாகாது என எங்களுக்கு தெரியும்.
தோழர் அசோக் உயிருடன் இருந்தால்அந்த குடும்பத்தின் காப்பாளனாக எப்படி இருப்பானோ அப்படி அந்த குடும்பத்தை கடைசிவரை பாதுகாக்கிற பொறுப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்றுக்கொள்ளும். இந்தகூட்டம் நெல்லை மாவட்டத்தில் நடக்கும் சாதிய ஆணவத்தை வேரறுக்க வேண்டும் என்பதற்காக நடத்தப்படுகிறது.

மக்களுக்கு அவமானம்
சாதிகள் இல்லையடி பாப்பா என்று கூறினார் இந்த மண்ணில் பிறந்த முண்டாசு கவிஞர் பாரதி. தமிழகத்திலும் இந்தியா முழுவதும் மட்டுமல்ல, அந்த குரல் உலகத்துக்கே வேதமாக மாறியிருக்கிறது. ஆனால் அவன் பிறந்த மண்ணில் சாதிய ஒடுக்குமுறை, சாதிய ஆணவம், சாதி வெறி பேய் பிடித்து ஆடும் மாவட்டமாக மாறியிருக்கிறது. இது இந்த மாவட்ட மக்களுக்குஏற்பட்டிருக்கும் அவமானம். தோழர் அசோக்கை நாங்கள் என்ன செய்தாலும் மீட்க முடியாது. ஆனால் இதற்கு மேலும் பல
அசோக்குகள் இந்த மண்ணில் வீழ வேண்டுமா? இந்த குடும்பம் தன் தலைமகனை இழந்து வாடுகிறதே. அதேபோல் இன்னும்பல குடும்பங்கள் கண்ணீரும் கம்பலையுமாக மாற வேண்டுமா? இதனால் யாருக்கு என்ன லாபம்?எந்த ஒரு சாதியையும் நான் குற்றம்சாட்ட விரும்பவில்லை. யாரும் குற்றவாளிகளாக பிறப்பதில்லை. ஆனால் சாதி வெறிபிடித்திருக்கும் ஒருசிலர் இந்த படுகொலைகளை செய்துவிட்டு அதற்கு சாதி முலாம் பூசுகிறார்கள். இதை கரையிருப்பு கிராமத்து மக்களே தெரிவித்தார்கள். எங்களுக்கும் இதற்கும் சம்மந்தமில்லை. நாங்கள் இந்த படுகொலையை ஆதரிக்கவில்லை. அசோக் எங்களுக்கும் சேர்த்து தான் குரல் எழுப்பினான் என்று அவர்கள் விசாரணைக் குழுவிடம் தெரிவித்தனர்.

திமுகவுக்கு வேண்டுகோள்
நாம் செய்ய வேண்டியது சாதி வெறிசக்திகளை அடையாளம் கண்டு தனிமைப்படுத்துவது தான். அதற்கான இயக்கம் இன்று இங்கிருந்து துவங்குகிறது. இனி இந்த மாவட்டத்தில் சாதிய படுகொலைகள் நடக்காமல் இருக்க அனைவரையும் அழைக்கிறோம். திமுகவையும் இந்த சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் இணையுமாறு கேட்டுக்கொள்கிறேன். ஒரு வீடு தீப்பிடித்தால் எல்லோரும் சேர்ந்துஅணைப்பது போல மாவட்டத்தை பற்றியிருக்கும் சாதி தீயை அணைக்க அனைவரும் முன்வரவேண்டும்.இங்கே இடதுசாரி தலைவர்கள் இணைந்திருக்கிறார்கள். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதை ஏற்று செயல்படுத்துகிறவர்கள் கம்யூனிஸ்ட்டுகள். ஓட்டுதான் பலருக்கு முக்கியம். ஆனால், சாதியைவேரறுப்பதற்கான இந்த போராட்டத்தில் எந்தவிளைவுகளையும் சந்திக்க தயாராக இடதுசாரிகள் உள்ளோம் என கே.பாலகிருஷ்ணன் பேசினார்.