திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் இருள்நீக்கி ஊராட்சியில் உள்ள குளங்களை பொது ஏலம் விடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் ஊராட்சி மன்ற தலைவர் செங்கொடி குமாரராஜா மாவட்ட ஆட்சியரை நேரில்சந்தித்து மனு அளித்து வலி யுறுத்தியுள்ளார்.
அந்த மனுவில் தெரிவிக்கப் பட்டிருப்பதாவது:
இருள்நீக்கி ஊராட்சிக்குட்பட்ட நெருஞ்சினகுடி கிராமத்தில் சிங்காரவேல் என்பவர் அரசு குளத்தை ஆக்கிரமித்து பல ஆண்டுகளாக வருவாய் ஈட்டி வருவதாக கிராமகமிட்டி மற்றும் பொதுமக்கள் கோட்டூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்திருந்தனர். இதன் காரணமாக ஊராட்சியில் உள்ள அனைத்து குளங்களையும் ஆய்வுசெய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்ததால் வட்டார வளர்ச்சி அலுவலர் நேரடி ஆய்வில் ஈடுபட்டார்.
ஊராட்சி குளங்கள்
ஆய்வின் முடிவில்வருவாய் துறை ஆவணங்கள் மற்றும்பதிவேடுகளின்படி வாணியன் குளம், பெருமாள்குளம், வெங்காயகுட்டை, எடையன்குட்டை, திருவாசல்குளம் உள்ளிட்ட குளங்கள்அரசு புறம்போக்கு வகைப்பாட்டை சேர்ந்தது என்பது தெரியவந்தது. எனவே இந்த குளங்களை ஊராட்சி நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்து, பொது ஏல அறிவிப்பு செய்வதற்கு வட்டார வளர்ச்சி அலுவலரை அணுகி முறைப்படி அனுமதி பெறப்பட்டது. அதன்பின்னர் கடந்த 9.2.2021 அன்று மேற்படி குளங்களை பொது ஏலம் விடுவதற்கு விதிமுறைகளின்படி அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. வட்டார வளர்ச்சி அலுவலரின் வேண்டுகோள்படி காவல்துறை பாதுகாப்பிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.
முட்டுக்கட்டை
இந்நிலையில் சிங்காரவேல் என்பவர் பயன்படுத்தி வருவாய் இயற்றி வந்த குளத்தை பொதுஏலத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று கூறிய சிலர், தற்போது அவர்கள் பயன்படுத்திவந்த குளங்களும் ஊராட்சிக்கு சொந்தமானது என கண்டறியப்பட்டு பொது ஏலம் விடுவதற்குஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை யெடுப்பதற்கு தடையாக சுயநல நோக்கத்தோடு முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர். இதனால்ஊராட்சியில் பொது அமைதிக்குபாதிப்பு ஏற்படும் என்ற எண்ணத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் பொது ஏலத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க அறிவுறுத்தியதன்படி, பொது ஏலம் விடுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே மாவட்ட ஆட்சியர் தலையிட்டு சம்பந்தப்பட்ட அலுவலர் களுக்கு உத்தரவிட்டு கிராம ஊராட்சி சொத்தான குளங்களை ஊராட்சி அதிகாரத்தின் கீழ் பொது ஏலம் விட்டு ஊராட்சி வருவாயை பெருக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் வலியுறுத்தப் பட்டுள்ளது.மனுவை பெற்ற கொண்ட மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து பொது ஏலம் விடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.