மன்னார்குடி:
இந்து முன்னணி சார்பில் வெள்ளியன்று நடைபெற்ற விநாயகர் ஊர்வலம் முத்துப்பேட்டை நகரத்தின் இயல்பு வாழ்க்கையை தலை கீழாக மாற்றிப் போட்டிருந்தது. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை முக்கிய பகுதியில் 55 நிரந்தர கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல் நிலையகட்டுப்பாட்டு அறையில் கண்காணிக்கப்பட்டது. ஊர்வல பாதையை நெடுகிலும்நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமாரக்கள் பொருத்தப்பட்டன. ஊர்வலம் செல்லும் போது ஏராளமான வீடியோ கேமராக்கள் பயன்படுத்தப்பட்டன. ஆங்காங்கே கண்காணிப்பு தற்காலிக கோபுரங்கள் அமைக்கப்பட்டன.
பதற்றமான பகுதிகளில் சாலை இருபுறங்களிலும் தடுப்பு வேலிகள் அமைத்து மற்றும் ஆங்காங்கே நூற்றுக்கணக்கான பேரிகாடுகள் போடப்பட்டன. ஆங்காங்கே வஜ்ரா வாகனங்கள், தீயணைப்பு வாகனங்கள் தயார்நிலையில் நிறுத்தப்பட்டன. ஊர்வலத்தை முன்னிட்டு திருச்சி சரக ஐ.ஜி.வரதராஜ், தஞ்சை டி.ஐ.ஜி லோகநாதன் உட்பட திருச்சி மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களை சேர்ந்த மூவாயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முத்துப்பேட்டை நகர கடைகள் முழுவதும்அடைக்கப்பட்டன. மாவட்டம் முழுவதும் வருவாய்த்துறை அதிகாரிகள் நகரத்தில் முகாமிட்டனர். முத்துப்பேட்டையை ஒட்டியுள்ள பேட்டை தில்லைவிளாகம், தம்பிக்கோட்டை, செம்படவன்காடு, கோவிலூர் உட்பட சுற்றுப் புறப்பகுதியில் ஏற்கனவேஇருந்ததை விட கூடுதலாக மேலும் சிறப்பு சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டன. போக்குவரத்து காவலர்கள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
கடல் வழியாக தீவிரவாதிகள் யாரும் ஊடுருவாமல் இருக்க கடற்கரைப் பகுதிகள்மற்றும் அலையாத்திக் காடுகள், லகூன்பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.கடற்படை காவலர்களும் ரோந்து பணியில்ஈடுபட்டனர். மொத்தத்தில் அலையாத்திக்காடுகளின் அழகிய கடலோர நகரமான முத்துப்பேட்டை ஒரு வார கால எச்சரிக்கை முன்னேற்பாடுகளால் காவல்துறையின் அதீத கெடுபிடிகளால் அல்லோகலப்பட்டது. விநாயகர் ஊர்வலம் எந்திர துப்பாக்கிகள் ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்போடு சென்றது.