tamilnadu

img

தமிழகத்துக்கு 71 லட்சம் தடுப்பூசிகள் பெற நடவடிக்கை.... மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்....

திருவண்ணாமலை;
தமிழகத்துக்கு ஜூலை மாதத்துக் கான ஒன்றிய அரசின் தொகுப்பில் இருந்து 71 லட்சம் தடுப்பூசிகளை பெறநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.திருவண்ணாமலை பழையஅரசு மருத்துவமனை மற்றும் அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திங்களன்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, ரூ.10 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள தாய்ப்பால் சேமிப்பு வங்கியை திறந்து வைத்தார். பின்னர், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தலா ரூ.18 லட்சம் மதிப்பில் 2 மருத்துவ பல்நோக்கு வாகனங்களின் பயன்பாட்டை தொடங்கி வைத்து, ரூ.6.79 லட்சம் மதிப்பில் 116 பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர்.அப்போது அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியதாவது, ‘‘திருவண்ணா மலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆண் மற்றும் பெண்களுக்கு என 2 நல வாழ்வு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கான சிகிச்சை மையங்களை அனைத்து இடங்களிலும் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 3 ஆவது அலை, குழந்தைகளை தாக்கும் என மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர்.

30 தீவிர சிகிச்சை படுக்கைகள்
திருவண்ணாமலை அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகளுக்காக 30 தீவிர சிகிச்சை படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் வசதியுடன் 150 படுக்கைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. பழைய அரசு மருத்துவமனையில் 350 படுக்கை களுக்கு (பொது) ஆக்சிஜன் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை, ஆட்சி பொறுப்பு ஏற்கும்போது இருந்ததைவிட, 9 மடங்கு குறைந்துள்ளது. மாவட்டத்தில் 4,000 பேருக்கு தினசரி கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.தமிழகத்தில் 1.70 லட்சம் பரிசோதனைகள் தினசரி செய்யப்படுகிறது. இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் பரிசோதனை செய்யும் மாநிலமாக தமிழகம் உள்ளது. தொற்று குறைந்து வந்தாலும், தினசரி பரிசோதனை எண்ணிக்கை அதே அளவில் நீடிக்கிறது.தமிழகத்தில் இதுவரை 1.57 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஜூலைமாதத்துக்கான, ஒன்றிய அரசின் தொகுப்பில் இருந்து 71 லட்சம் தடுப்பூசி வர வேண்டும். ஆனால் இதுவரை 10 லட்சம் தடுப்பூசிகளே வந்துள்ளன. எஞ்சிய தடுப்பூசிகளை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம் காட்டூர் ஊராட்சி, தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் தன்னிறைவு பெற்றுள்ளது. பழங்குடியினர் மற்றும் தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்ட மாவட்டமாக நீலகிரி உள்ளது.அதேபோல், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள் வந்து செல்லும் ஆன்மீக தலமாக உள்ள திருவண்ணாமலை நகராட்சியில் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டதில், நாட்டில் முதல் நகராட்சியாக மாற்ற ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

இதய நோய் சிகிச்சை
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதய நோய் சிகிச்சைக்காக வேலூருக்கு பரிந்துரை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இதய நோய் சிகிச்சைக்காக பிரத்யேக கட்டமைப்பு ஏற்படுத்திக் கொடுக்க துறை ரீதியாக விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.