திருவனந்தபுரம்
கேரளத்தில் 28 மருத்துவமனைகள் முழு அளவிலான கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டுள்ளன. அதன்படி 14 மாவட்டங்களும் தலா இரண்டு கொரோனா மருத்துவமனைகளை கொண்டிருக்கும். மருத்துவ கல்லூரிகள் மற்றும் மாவட்டங்களில் உள்ள முக்கிய மருத்துவமனைகள் கொரோனா மருத்துவமனைகளாக மாற்றப்பட்டு வருகின்றன.
இவற்றில், எர்ணாகுளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஏற்கனவே கொரோனா மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. மீதமுள்ளவற்றில் பணிகள் நிறைவடைந்துள்ளன. கொரோனா நோய் கண்காணிப்பில் உள்ளவர்களுக்கு நோய் உறுதி செய்யப்பட்டால், அவர்கள் கொரோனா சிகிச்சைக்கு சிறப்பு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்படுவார்கள். இதற்காக இதர மருத்துவ சேவைகள் குறைக்கப்பட்டுள்ளன. அறுவை சிகிச்சைகள் மற்றும் வெளிநோயாளிகள் பிரிவு ஆகியவை நிறுத்தி வைக்கப்பட்டன.
மண்டல புற்றுநோய் மையம் மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீ சித்ரா நிறுவனம் ஆகியவற்றில் உள்ள வசதிகள் இந்த நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும். கொரோனா மருத்துவமனைகளாக முக்கிய மருத்துவ மையங்களை மாற்றி அமைப்பது பிற அவசர சேவைகளை பாதிக்காது என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.